சென்னை: சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே மே மாதத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை செயல்படுத்தப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை வேளச்சேரியிலிருந்து பரங்கி மலை வரை நீட்டிப்பதற்காக பணிகள் 2008ல் தொடங்கப்பட்டது. 495 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கிய நிலையில் நிலம் கையகபடுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளில் 500 மீட்டர் நீல பணிகளை மட்டும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு வரும் மே மாதத்திற்குள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் குறி உள்ளனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என வேளச்சேரி சுற்றுவட்டார மக்கள் கூறுகின்றனர். 2010ல் முடிய வேண்டிய இந்த திட்டம் பல ஆண்டுகள் கிடப்பில் இருந்ததால் தற்போது திட்டத்தின் மதிப்பீடு 730 கோடியாக உயர்ந்துள்ளது. பணிகள் நிறைவு பெற்றபின் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற்று வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் இயக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே மே மாதத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு..!! appeared first on Dinakaran.
