வாஷிங்டன்: புலம்பெயர்ந்தோர் விமானத்தை திருப்பி அனுப்பியதால் கொலம்பியா பொருட்களுக்கு 25% அவசர வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது இலக்கில் தற்போது கொலம்பியா சிக்கியுள்ளது. தற்போது கொலம்பியா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், ‘இரண்டு அமெரிக்க விமானங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்ற கப்பலை கொலம்பியா திருப்பி அனுப்பி உள்ளது. எனவே கொலம்பியா மீது வரி மற்றும் விசா கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் முடிவு அமெரிக்க தேசிய பாதுகாப்பை சீர்குலைத்துள்ளது. அமெரிக்க சந்தைகளில் விற்கப்படும் அனைத்து கொலம்பிய பொருட்களுக்கும் 25 சதவீத அவசர வரி விதிக்கப்படும். அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்படும். கொலம்பிய நாட்டின் அதிகாரிகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொலம்பியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம் மட்டுமே. கொலம்பியா அரசு தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க மாட்டோம். அவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பிய சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, ‘புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க விமானங்களை கொலம்பியா அனுமதிக்கவில்லை. டிரம்பின் செயல்பாடுகள் சரியாக இல்லை. புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளைப் போல அமெரிக்காவால் நடத்த முடியாது. புலம்பெயர்ந்தோர் சிவில் விமானத்தில் கொலம்பியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்தோரை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.
கொலம்பியாவில் 15,660 அமெரிக்கர்கள் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர்’ என்றார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்று ஒரு வாரமான நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது எடுப்பது, தெற்கு அமெரிக்க எல்லையில் அவசரகால நிலையை அமல்படுத்தியது போன்ற விசயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்திற்கு உதவிகள் நிறுத்தம்;
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் தற்போது இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வங்கதேசம் நாட்டிற்கு செய்து வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் சார்பில் வங்கதேசத்தில் ெசயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் ஜவுளி, எரிசக்தி, விவசாயம், தகவல் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு வரை வங்கதேசத்திற்கு அமெரிக்கா சார்பில் சுமார் 3 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இருந்தது. தற்போதைய டிரம்ப் அரசின் நடவடிக்கையால் வங்கதேசத்தின் பொருளாதாரம் ெபரிதும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல்லையில் அவசரநிலை;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த எல்லை அவசரநிலை காரணமாக சட்டவிரோத குடியேற்றம் குறைந்துள்ளது. ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரும் எல்லை ரோந்துப் படையால் மணிக்கணக்கில் கண்காணிக்கப்படுகிறார்கள். சான் டியாகோ மற்றும் எல்.பாசோவில் மட்டும் சுமார் 1,500 எல்லைப் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2023 டிசம்பரில் 2.5 லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அந்த எண்ணிக்கை 2024 டிசம்பரில் 47,000 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
The post புலம்பெயர்ந்தோர் விமானத்தை திருப்பி அனுப்பியதால் கொலம்பியாவின் பொருட்களுக்கு 25% அவசர வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.
