கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக பகை நிலவி வருகிறது. ஒருகாலத்தில் இவ்விரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த நிலையில், கடந்த 1999ல் ஹ்யூகோ சாவோஸ் அதிபரான பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சாவோஸ் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தார். சாவோசுக்குப் பிறகு அவருக்கு நெருக்கமான நிக்கோலஸ் மடுரோ 2013ல் இருந்து அதிபராக இருக்கிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் இருந்தே மடுரோவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தும் குழுத்தலைவராக மடுரோ இருப்பதாக கடந்த 2020ல் நேரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பென்டனைல், கொகைன் போன்ற போதைப்பொருட்கள் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். மேலும் வெனிசுலா ஒட்டிய கடல் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் பல போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது 80க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. சமீபத்தில் வெனிசுலாவின் எண்ணெய் கப்பலையும் அமெரிக்கா சிறைபிடித்தது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மடுரோ, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை திருடுவதற்காக ஆட்சி அதிகாரத்தை அபகரிக்கவே அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறுகிறார். இதற்கிடையே, மடுரோ பதவி விலக வேண்டும், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அதிபர் டிரம்ப் கடந்த நவம்பரில் கெடு விதித்தார். அதற்கு மடுரோ அடிபணியாததால் கரீபியன் கடல் பகுதியில் போர் கப்பல்களுடன் பெரும் படை குவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்த நிலையில், எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக மடுரோ கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் வெனிசுலாவின் தலைநர் கராகஸ் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் பயங்கர தாக்குதல் நடத்தின. இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்து மக்கள் பீதிக்குள்ளாகினர். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமானத் தளம் மற்றும் புவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் உள்ளிட்ட 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வான உயரத்தில் பறந்து சுமார் 30 நிமிடங்களுக்கும் குறைவாக குண்டு மழை பொழிந்தன.
இதில் எத்தனை பேர் பலியாகினர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலால் தலைநகர் கராகசின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்த வெனிசுலா அதிபர் மடுரோ, நாட்டில் தேசிய அவரசநிலையை அறிவித்தார். மேலும், பொதுமக்கள் வீதிக்கு வந்து யுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ராணுவமும் உஷார்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக அமெரிக்காவின் டெல்லா படைப்பிரிவினர் அதிபர் மடுரோவையும் அவருடன் இருந்த அவரது மனைவி சிலியா புளோரசையும் சிறைபிடித்து நாடு கடத்தினர். இத்தகவலை அதிகாலை 4.30 மணி அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘வெனிசுலா மற்றும் அதன் அதிபர் மடுரோவுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. இதில், மடுரோ, அவரது மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. இது குறித்த விவரங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவேன்’’ என்றார். அதிபர் மடுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு வெனிசுலா மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தாது என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடுரோ இனி வெனிசுலாவின் அதிபர் அல்ல என அமெரிக்கா கூறி உள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* நாடு கடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு உயிருடன் இருக்கிறார்களா? ஆதாரம் கேட்கும் வெனிசுலா
வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிகமாக நிர்வாக பொறுப்பை கையில் எடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘அதிபர் மடுரோ, அவரது மனைவியின் இருப்பிடம் எங்களுக்கு தெரியாது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.
* வெனிசுலாவின் எண்ணெய் வளம்
வெனிசுலா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகள் விதித்த போதிலும், அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிய தூணாக கச்சா எண்ணெய் இருந்து வருகிறது. எண்ணெய் விற்பனை மூலம் தான் வெனிசுலா அரசின் பட்ஜெட்டுக்கு தேவையான நிதியில் பாதி கிடைக்கிறது. தற்போது அந்நாடு ஒருநாளைக்கு சுமார் 9 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. அவர்களிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடாக சீனா இருக்கிறது.
* யார் இந்த மடுரோ?
1962ம் ஆண்டு கராகசில் பிறந்த மடுரோ, சாதாரண பஸ் டிரைவாகவும், தொழிற்சங்க தலைவராகவும் இருந்தவர். வெனிசுலாவின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சேர்ந்த பிறகு படிப்படியாக முன்னேறி, இடதுசாரி தலைவரான ஹ்யூகோ சாவோசுக்கு நெருக்கமானவர் ஆனார். அவரது வெனிசுலா ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைமையில் முக்கியத்துவம் பெற்றார். 2006 முதல் 2013 வரை வெளியுறவு அமைச்சராக இருந்த மடுரோ, 2013ல் சாவோஸ் மரணத்திற்கு பிறகு இடைக்கால அதிபராகி பின்னர் நிரந்தர அதிபர் ஆனார். இவரது ஆட்சிக்காலம் முழுவதும் பொருளாதார தடைகள், பொருளாதார சீர்குலைவு, மக்கள் போராட்டம் என பல்வேறு தடைகளை சந்தித்தவர். ஆனாலும், சாவோஸ், மடுரோ இருவரது ஆட்சிக்காலத்திலும் அவர்களது கட்சி தேசிய சட்டமன்றம், நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் கொண்டிருக்கிறது. இதனால் கடைசியாக நடந்த அதிபர் தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
* ரஷ்யா, சீனா கண்டனம்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கும், வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கும் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது அப்பட்டமான சர்வதேச விதி மீறல் என ரஷ்யா, சீனா, கியூபா, ஈரான், பிரேசில், கொலம்பியா, சிலி, மெக்சிகோ, ஈரான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கூட்டப்பட வேண்டுமென வெனிசுலா வலியுறுத்தி உள்ளது.
* நியூயார்க் கொண்டு வரப்படுவார்: டிரம்ப்
பாகிஸ்தான் நியூஸ் சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கைது செய்யப்பட்ட மடுரோ நியூயார்க்குக்கு கொண்டு வரப்படுவார். இங்கு அவர் போதைப் பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான நீதி விசாரணையை எதிர்கொள்வார். இந்த தாக்குதலில் அமெரிக்க படையில் யாரும் உயிரிழக்கவில்லை. சில வீரர்களுக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. இனி வெனிசுலாவின் எண்ணெய் தொழிலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடப் போகிறது. இந்த ஆபரேஷனுக்காக 4 நாட்கள் காத்திருந்தோம். தகுந்த வானிலை உள்ளிட்ட நிலவரங்களை ஆராய்ந்து சரியான நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக அதிபர் மடுரோவை சிஐஏ தொடர்ந்து வேவு பார்த்து வந்தது. இனி வெனிசுலாவின் தலைமை குறித்து விரைவில் முடிவெடுப்போம்’’ என கூறி உள்ளார்.
* 20 இடங்களில் தாக்குதல்
லா கார்லோட்டா விமானப்படைத் தளம், கராகசின் நுழைவாயிலான லா குவைரா துறைமுகம், ஹிகுரோட் விமான நிலையம், புவர்டே டியூனா ராணுவ மையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் லார் கார்லோட்டா உள்ளிட்ட இடங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.
* சதாம் உசைனை போல…
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், பனாமாவின் முன்னாள் ராணுவ தலைவர் மானுவல் நோரிகா ஆகியோர் வரிசையில் மடுரோவும் இணைந்துள்ளார். இதற்கு முன், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை காரணம் காட்டி 1989ல் பனாமா மீது படையெடுத்த அமெரிக்கா மானுவல் நோரிகாவை கைது செய்து பதவியில் இருந்து அகற்றியது. 2017ல் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். பின்னர் 2003 டிசம்பர் 13ல் ஈராக்கிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட தவறான உளவுத் தகவல்களின் அடிப்படையில் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். 2006ல் ஈராக் நீதிமன்ற தீர்ப்பின் படி அவர் தூக்கிலிடப்பட்டார்.
* நியூயார்க்கில் நீதி விசாரணை
போதைப் பொருள் பயங்கரவாதம் சதி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக அதிபர் மடுரோவுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டிலேயே நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது மடுரோ இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பண்டி கூறி உள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘விரைவில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க நீதியின் முழு கோபத்தையும் மடுரோ எதிர்கொள்வார்’’ என கூறி உள்ளார். இந்த வழக்கில் மடுரோவுக்கு எதிராக மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரது மனைவி விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
