×

கெஜ்ரிவாலுக்கு குஜராத் போலீஸ் பாதுகாப்பு ஏன்? ஆம் ஆத்மி கேள்வி

அகமதாபாத்: டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்புக்கு குஜராத் எஸ்ஆர்பிஎப் பிரிவினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 3ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் டெல்லி காவல்துறையினர் “கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் காவல்துறை அளித்து வரும் பாதுகாப்பை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்” என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் காவல்துறை வழங்கி வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, குஜராத் மாநில ரிசர்வ் போலீஸ் படை(எஸ்ஆர்பிஎப்) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 13ம் தேதி குஜராத் மாநில ரிசர்வ் போலீஸ் படையினர் டெல்லி வந்தடைந்தனர். இந்நிலையில் குஜராத் எஸ்ஆர்பிஎப் பாதுகாப்பு குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் தன் எக்ஸ் பதிவில், “பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பை அகற்றி விட்டு, குஜராத் மாநில ரிசர்வ் போலீஸ் படை நிறுத்தப்படுவது ஏன்? டெல்லியில் என்ன நடக்கிறது? இது தூய்மையான அரசியல்” என்றும், “குறைந்தபட்சம் தனிப்பட்ட பாதுகாப்பில் எந்த அரசியலும் இருக்க கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.

The post கெஜ்ரிவாலுக்கு குஜராத் போலீஸ் பாதுகாப்பு ஏன்? ஆம் ஆத்மி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Gujarat ,AAP ,Ahmedabad ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Gujarat SRPF ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...