×

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் சின்னர்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் வின்னர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜேனிக் சின்னர், உலகின் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை அபாரமாக வென்றார். இதன் மூலம், இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளார். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன், கடந்த 12ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நடந்தது. இதில் இத்தாலி வீரரான, உலகின் முதல் நிலை வீரர் மற்றும் நடப்பு சாம்பியன் ஜேனிக் சின்னர் (23), ஜெர்மனியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (27) உடன் மோதினார். அரை இறுதிப் போட்டியில் தடுமாற்றத்துடன் ஆடிய சின்னர், முழு உடல் திறனுடன் அற்புதமாக ஆடி வரும் ஸ்வெரெவுக்கு ஈடுகொடுப்பாரா என்ற கேள்வி டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று நடந்த போட்டியின் முதல் செட்டை சின்னர் முழுத் திறனை வெளிப்படுத்தி கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். அந்த செட்டில் இருவரும் 6-6 என்ற புள்ளிக்கணக்கில் நின்றதால் டை பிரேக்கர் ஆட்டம் நடந்தது. அதில் சிறப்பாக செயல்பட்ட சின்னர், 2வது செட்டையும் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டும் எளிதில் அவர் வசமானது.

இதனால், 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற சின்னர், தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் மகத்தான கவுரவம் அவருக்கு கிடைத்துள்ளது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள சின்னருக்கு ரூ.19 கோடி பரிசுப்பணமும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. தோற்று 2ம் இடம் பிடித்த ஸ்வெரெவுக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

* மகளிர் இரட்டையர் பிரிவில் கேத்தரீனா டெய்லர் சாம்பியன்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று செக் வீராங்கனை கேத்தரீனா சினியகோவா, அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவ்ன்சென்ட் இணை, சைனீஸ் தைபே வீராங்கனை சு-வெ ஸீ, லாத்வியா வீராங்கனை ஜெலெனா ஒஸ்டபென்கோ இணையுடன் மோதியது. முதல் செட்டை கேத்தரீனா இணை எளிதில் கைப்பற்றியது. 2வது செட்டை கைப்பற்ற இரு இணைகளும் கடுமையான போராடினர்.

டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை கடும் இழுபறிக்கு பின்னர், சு-வெ ஸீ இணை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட் போட்டி நடந்தது. அற்புத ஆட்டத் திறனை வெளிப்படுத்திய சினியகோவா இணை அந்த செட்டை எளிதில் கைப்பற்றியது. இதையடுத்து, 6-2, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சினியகோவா இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அவர்களுக்கு ரூ.6.88 கோடி பரிசுத் தொகையும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. தோற்று 2ம் இடம் பிடித்த சு-வெ ஸீ இணைக்கு, ரூ.3.75 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

The post ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் சின்னர்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் வின்னர் appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,Sinner ,Melbourne ,Janic Sinner ,Italy ,Alexander Zverev ,Germany ,Australian Open ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்