மதுரை: தமிழ்நாடு அரசின் நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் தனி தீர்மானத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.
இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு நவ. 7ல் வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதித்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம் அழிக்கப்படுவதுடன், பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாய நிலங்கள், தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணப் படுகைகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனால் மேலூர் சுற்றுவட்டார கிராமத்தினரும், விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தினர். கிராம சபை கூட்டங்களிலும் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த டிச. 9ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரசின் சார்பில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, உடனடியாக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.
தற்காலிகமாக ஒத்திவைப்பு: தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தால் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், டிச. 24ல் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் ஏற்கவில்லை. டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் கடையடைப்பு மற்றும் பல்வேறு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த ஜன. 7ம் தேதி நரசிங்கம்பட்டியில் இருந்து ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுரைக்கு சுமார் 20 கிமீ நடைபயண போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மதுரையே ஸ்தம்பித்தது. முதல்வர் சபதம்: முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’’ என உறுதிபட கூறியிருந்தார். இதனால், டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மக்களின் போராட்டத்தை முடக்க நினைத்த ஒன்றிய அரசு, பாஜ பிரமுகர்களை அப்பகுதி மக்களிடம் பேசுமாறு அனுப்பி வைத்தது.
இதன்படி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே தங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என உறுதிபட கூறினர். இதையடுத்து பாஜகவினர் அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 7 முக்கியஸ்தர்களை சில தினங்களுக்கு முன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்த முக்கியஸ்தர்கள் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சகத்தின் சார்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ‘‘ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை அவரது அலுவலகத்தில் அரிட்டாபட்டி பகுதியினர் சந்தித்து பேசிய போது, அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம், பண்டைய கலாச்சார அடையாளங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து அமைச்சரிடம் எடுத்து கூறினர். பல்லுயிர் மரபுத் தளத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய உரிமைகளையும் பாதுகாக்கும்விதமாக நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதிக்கான ஏல நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்து ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளதை அறிந்து மேலூர் வட்டார பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலூர், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், அழகர்கோவில், கிடாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அரிட்டாபட்டி கிராமத்தினர் கூறுகையில், ‘‘தமிழக அரசின் முன் முயற்சியே எங்களை உறுதிபட போராட வைத்தது. தமிழ்நாடு அரசின் அழுத்தமும், எங்களது போராட்டமும் ஒன்றிய அரசை அசைத்து பார்த்துள்ளது. டங்ஸ்டன் திட்டம் ரத்தானது எங்களுக்கு மீண்டும் உயிர் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏல ரத்தின் மூலம் எங்களது பாரம்பரிய புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றி’’ என்றனர்.
* மாநில அரசின் உறுதிக்கு பணிந்தது ஒன்றிய அரசு: முதல்வர் எக்ஸ் தள பதிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என உறுதிபடத் தெரிவித்தேன். சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல், இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக்கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணை போகக் கூடாது’’ என குறிப்பிட்டுள்ளார்.
* ஒன்றிய அரசின் சூழ்ச்சியை உடைத்த மக்கள் போராட்டம்: மதுரை எம்பி பேட்டி
மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை மக்களிடம் தொடர்ந்து எடுத்து கூறினோம். ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பாஜவின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது. எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது’’ என்றார்.
* ‘அரசிதழில் வெளியிட வேண்டும்’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்து விட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடுவது ஒன்றுதான் இந்தப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழியாக இருக்கும். எதைச் சொன்னாலும் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்கிற திமிருடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டங்களை நிறைவேற்றுவது, எதிர்க்கட்சிகள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லை. விவாதத்திற்கு அனுமதிப்பதில்லை. எதேச்சதிகாரமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
* மண்ணுக்கு மக்கள் முத்தம்: மிரள வைத்த பட்டாசு சத்தம்
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மந்தை திடல் முன்பு கூடியிருந்த ஏராளமானவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். விவசாயிகள் ஒன்றுகூடி குலவையிட்டு கோயில் முன்பாக மண்ணை தொட்டு வணங்கினர். முதிய பெண்கள் மண்ணைத் தொட்டு முத்தமிட்டனர். பெண்கள் குலவையிட்டும், கும்மியடித்தும், குலவைப் பாடலுக்கு ஏற்ப நடனமாடியும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மூதாட்டி முதல் முதியவர்கள் குழந்தைகள், மாணவர்கள் என அத்தனை தரப்பினரும் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டங்ஸ்டன் பாதிப்பிலிருந்து மீண்ட கிராமங்களில் பொங்கல் வைத்து கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியில் கண்ணீர் ததும்ப பெண்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.
The post தமிழக அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி appeared first on Dinakaran.
