×

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு சோகம்; அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வாங்க வந்த முதியவர் நெரிசலில் சிக்கி பலி

தவளக்குப்பம்: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வாங்க வந்த முதியவர் நெரிசலில் சிக்கி பலியானார். சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரியாங்குப்பம் ஆர்.கே நகர் விளையாட்டு திடலில் அதிமுக சார்பில் நேற்றிரவு எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் பேசினர். பொதுக்கூட்ட முடிவில் நலத்திட்ட உதவியாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது.

அதனை வாங்க அரியாங்குப்பம் மற்றும் வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அவற்றை வாங்குவதற்காக பலரும் விழா மேடையை நோக்கி ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு முதியவர் படியிலிருந்து தரையில் விழுந்து மயங்கினார். இதைப்பார்த்த கட்சி தொண்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அய்யனாரப்பன் (65) என தெரியவந்தது. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்துமா பிரச்னையும் உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் சந்தேக மரண பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு சோகம்; அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வாங்க வந்த முதியவர் நெரிசலில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,AIADMK ,Thavalakuppam ,Ariyanguppam ,Suspicious Death Section ,RK Nagar ,Puducherry's Ariyanguppam… ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!