கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்
ஸ்வாமி ராமானுஜரின் முதன்மைச்சீடர் என்ற பெருமை கொண்ட கூரத்தாழ்வானின் திரு அவதார தினம், தைமாதம் அஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாள். ஒரு சீடன் என்பவன் தன் குருவினிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர், கூரத்தாழ்வான். கூரத்தாழ்வானைவிட ஏழு வயது இளையவர் அவருடைய குருவான ஸ்வாமி ராமானுஜர். கூரம் என்ற ஊரில் பிறந்து வாழ்ந்து அங்கே பசி என்று தன் இல்லம் நோக்கி வந்தவர்கள் அனைவருக்கும் வாரி வாரி உணவிட்ட வள்ளல், கூரத்தாழ்வான்.
கருணையின் இருப்பிடம் கூரத்தாழ்வான். திருவரங்கத்தமுதனார், தாம் அருளிய “இராமானுச நூற்றந்தாதியில்”, கூரத்தாழ்வானை குறிப்பிட்டு, “மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக் கடக்கும், நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் பழியைக் கடத்தும் ராமானுசன் புகழ் பாடி, அல்லா வழியைக்கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தமன்றே” என்றே பாசுரம் அருளி இருப்பார்.
மொழியை கடக்கும் பெரும் புகழான் என்றால், நம்முடைய வாக்குக்கும் மனதிற்கும் எட்டவே எட்டாத பெரும்புகழ் உடையவர் கூரத்தாழ்வான். சிறந்த கல்வி, மிகவும் பணக்காரன் என்று சொல்லக்கூடிய பெரும் பெருமைகள் இருந்தும், சிறிதும் கர்வப்படாமல் இருந்தவர் கூரத்தாழ்வான் என்றே குறிப்பிட்டிருக்கிறார். வேத மாதா, பல்வேறு ஆசார்யர்கள் அருளிய ஸ்தோத்திரங்களையே தம்முடைய ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கிறாள் என்று சொல்வதுண்டு.
அவளின் கை வளையல்களாக இருப்பவை பராசரபட்டர் அருளிய ஸ்தோத்திரங்கள், நெற்றிச் சுட்டியாக அலங்கரிப்பவை ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன் எழுதிய ஸ்லோகங்கள், அந்த வேத மாதாவின் திருமாங்கல்யமாக, அதாவது தாலிச் சரடாக இருப்பவை கூரத்தாழ்வான் அருளிய பஞ்ச ஸ்தவம் என்றழைக்கப்படும் ஐந்து ஸ்லோகங்கள் தான். வத்சசின்னர், என்பதுதான் இவரது இயற்பெயர். அதன் அர்த்தம், திருமரு மார்வர் என்பதே. கூரத்தாழ்வான் பிறக்கும்போதே அவருடைய திருமார்பில் மரு இருந்ததாம். திருமாலில், திருமார்பில் இருக்கக்கூடிய வத்சம் எனும் மரு, கூரத்தாழ்வானின் திருமார்பிலும் இருந்ததால், அவருடைய பெற்றோர்கள் வத்சசின்னர் என்றே பெயரிட்டனர்.
திருமாலே கூரத்தாழ்வானாக திரு அவதாரம் செய்தார் என்றும் கூறுவர் பெரியோர்கள். யுகங்கள் தோறும் திருமால் ஒவ்வொரு விதமாக தோன்றும் போது, அவருக்கேற்ப ஆதிசேஷனும் திருமாலோடு தோன்றி கைங்கர்யங்கள் பலவும் செய்து கொண்டே இருப்பார். க்ருத யுகத்தில், பாற்கடலில் தோன்றிய பரந்தாமனுக்கு, பாம்பணையாகவே இருந்து கைங்கர்யம் செய்த ஆதிசேஷன், த்ரேதா யுகத்தில், ராமராக திருமால் திரு அவதாரம் செய்த போது, அவரின் தம்பியாக லட்சுமணராக வந்து கைங்கர்யங்கள் புரிந்தார்.
அதே திருமால், துவாபர யுகத்தில், கண்ணனாக அவதாரம் செய்த போது, கண்ணனின் அண்ணனாக பலராமனாக வந்து கைங்கர்யம் செய்த அதே ஆதிசேஷனுக்குதான் திரும்ப கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற ஆசை திருமாலுக்குள் தலை தூக்கியபடியே இருந்ததாம். அதனால்தான் கலியுகத்தில், ஆதிசேஷன் ஸ்வாமி ராமானுஜராக திரு அவதாரம் செய்த போது, திருமால் கூரத்தாழ்வானாக திரு அவதாரம் செய்து, அந்த ஆதிசேஷ அவதார புருஷனையே தம் ஆசார்யனாக கொண்டு, தம் ஆசைதீர அவருக்கு அத்தனை விதமான கைங்கர்யங் களையும் செய்து மகிழ்ந்தாராம்.
இறைவன் படைத்த அத்தனை உயிர்களிடத்தும் அதீத கருணை கொண்டவர், தன்னை படைத்த இறைவன் மீது அதீத பக்தி கொண்டவர் கூரத்தாழ்வான் என்பதற்கு அவரது வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் சாட்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஆழ்வார்களின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து போகக்கூடியவர் கூரத்தாழ்வான் என்பதற்கு அவரது திருப்பெயரே சாட்சியாக இருக்கிறது. ஆம். நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களை அற்புதமாக விளக்கிச்சொல்வார் கூரத்தாழ்வான் என்பதாலேயே அவரிடம் திருவாய்மொழி பற்றிப் பேசச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று ஸ்வாமி ராமானுஜர் மிகவும் விரும்பி அவரிடம் கேட்க, அவரோ “நீங்கள் எனக்குக்குரு.
நீங்கள் சொல்லித்தான் நான் கேட்க வேண்டுமே தவிர, நான் சொல்லி நீங்கள் கேட்பதென்பது பெரிய அபச்சாரம்’’ என்று சொல்லி, ஸ்வாமி ராமானுஜரின் முன் திருவாய்மொழி பாசுர விளக்கங்களை சொல்ல, பணிவன்பால் மறுத்துவிட்டாராம். ஸ்வாமி ராமானுஜர் தன்னுடன் இருக்கும் இரண்டு சீடர்களை கூரத்தாழ்வானிடம் அனுப்பி அந்த சீடர்களுக்கு திருவாய்மொழி சொல்லித்தரும் படி கேட்க, கூரத்தாழ்வான் அப்படி திருவாய்மொழியைச் சொல்ல ஆரம்பித்து “உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்” என்று சொல்லிவிட்டு அப்படியே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாராம் கூரத்தாழ்வான்.
மயக்கத்திலேயே உயர்வற உயர் நலம் உயர்வற உயர் நலம்” என்று சொல்லி கொண்டே… எவ்வளவோண நற்கல்யாண குணங்களை கொண்டிருக்கிற அந்த திருமாலைப் பார்த்து அறியாத சிலர் குணங்களே இல்லாதவன் திருமால் என்று சொல்லிவிடுகிறார்களே என்று மயங்கிய நிலையிலேயே சொல்லிக் கொண்டே இருந்தாராம். பெருமாளின் கருணையை நினைத்து மயங்கிய கூரத்தாழ்வானை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமி ராமானுஜர், நம்மாழ்வாரை போலவே பெருமாளின் குணங்களில் ஆழ்ந்து மயங்கி விழுந்த கூரத்தாழ்வானை “ஆழ்வானே எழுந்திருங்கள்” என்று தட்டி எழுப்பினார், ஸ்வாமி ராமானுஜர். கூரத்தில் பிறந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் அதிகமாக ஆழ்ந்து விட்டதாலேயே கூரத்தாழ்வான் என்றே அழைக்கப்பட்டார். தன் அடியவர்களிடம் அதிக அன்பு செலுத்துபவர்களைத்தான் திருமாலுக்கு பிடிக்கும். தன் அடியவர்களை சொல்லாலோ செயலாலோ துன்புறுத்துபவர்களை திருமாலுக்கு பிடிக்காது.
காஞ்சி வரதராஜரின் பரம பக்தர் கூரத்தாழ்வான் என்பது மட்டுமல்லாமல், வரதராஜ பெருமாளைத் தரிசனம் செய்ய காஞ்சிபுரத்திற்கு வரும் அத்தனை அடியவர்களுக்கும், தன் வீட்டில் உணவளிப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். ஒரு சமயம் அப்படி காஞ்சி கருட சேவை நடை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், தம் வீட்டில் வருபவர்களுக்கு உணவளித்துக் கொண்டு இருக்கும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்த கூரத்தாழ்வான், காஞ்சி சென்று வரதராஜ பெருமாளை தரிசனம் செய்யக்கூட தன் வீட்டுவாசலை தாண்டாமல் இருந்த போது, இரண்டு யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து காஞ்சி கருட சேவையை தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
வரும் வழியில் கூரத்திற்குச் சென்று கூரத்தாழ்வானின் இல்லத்தில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் இருவரும், “என்ன இந்த கூரத்தாழ்வான் காஞ்சிக்கு மிக அருகில் இருக்கக் கூடிய ஒரு ஊரில் இருந்துகொண்டு, அந்த கருட சேைவயைப் தரிசனம் செய்ய போகாமல் இப்படி எல்லாருக்கும் விருந்தோம்பல் செய்து கொண்டிருக்கிறாரே” என்று கேலியாக பேசிக் கொண்டே போனார்களாம். இவர்கள் பேசிக் கொண்டு போனது கூரத்தாழ்வானின் காதுகளில் விழவில்லை.
ஆனால், பத்து மைல் தூரத்தில் கோயில் கொண்டிருந்த வரதராஜ பெருமாளின் காதுகளில் விழுந்து, இந்த அடியார்கள் வரும்போது கோயில் கதவைச் சாற்றி விட்டாராம் வரதர். “உங்களுக்கு நான் சேவை தர முடியாது. என்னுடைய பக்தர்களுக்கு உணவளித்து அவர்களின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கும் என் பரம பக்தனான கூரத்தாழ்வான் செய்யும் கைங்கர்யத்தை இழிவாக நீங்கள் பேசியதால், நான் உங்களுக்கு சேவை தர மாட்டேன்” என்று பெருமாள் சொல்ல, உடனே அந்த இருவரும் கூரத்திற்கு சென்று கூரத்தாழ்வானின் கால்களில் விழுந்து நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்க, கூரத்தாழ்வான், எந்த அபச்சாரமும் நீங்கள் செய்யவில்லை.
என் கால்களில் எல்லாம் விழ வேண்டாம் என்று சொல்லி கருணையோடு, தன் கண்களில் நீரோடு இப்போது காஞ்சிக்கு செல்லுங்கள் வரதர் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார் என்று சொல்லி அந்த யாத்ரீகர்களை காஞ்சிக்கு திரும்ப அனுப்பி வரதரின் சேவைக்கு பாத்திரமாகும்படி செய்த கூரத்தாழ்வானை நாமும் சரண் புகுவோம். அவரது சரணங்களை நம் மனதில் கொண்டு தியானிப்போம்.
நளினி சம்பத்குமார்
The post பசியைப் போக்கும் கூரத்தாழ்வான் appeared first on Dinakaran.
