×

நெல்லை டவுனில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

நெல்லை, ஜன. 22: நெல்லைக்கு நேற்று வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பாளை மார்க்கெட் கட்டுமான நிறைவு பணிகள் மற்றும் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை டவுனில் புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் நெல்ைல மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நெல்லை வந்தார். பாளையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டை நேரில் பார்வையிட்டு அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து பாளை நூற்றாண்டு மண்டபத்தில் கட்சியினருடன் ஆய்வு கூட்டம் நடப்பதால், அங்கும் இடவசதிகள் குறித்து ஆய்வு செய்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் வருகை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து வீரவநல்லூர் வெள்ளங்குளி சென்று தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்ட பணிகள் நிறைவு குறித்து நேரில் பார்வையிட்டார். இத்திட்டத்தை தமிழக முதல்வர் வரும் 7ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில், பணிகள் நிறைவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வு நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், எம்எல்ஏ அப்துல்வகாப், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர்.ராஜூ, ெதாகுதி பொறுப்பாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், முத்துச்செல்வி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி, எஸ்.பி.சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நெல்லை டவுனில் மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். டவுன் தீயணைப்பு நிலையம் நெல்லை, டவுன், கோடீஸ்வரன் நகர், ராமையன்பட்டி, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. அங்கு ஒரு நிலைய அலுவலரும், 17 வீரர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தீயணைப்பு நிலைய வாகனம் நேற்று வந்த நிலையில், சிறப்பு கருவிகள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. தீயணைப்பு நிலைய திறப்பு விழாவில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வினோத், உதவி தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன், டவுன் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், நாங்குநேரி நிலைய அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நெல்லை டவுனில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : fire station ,Nellai Town ,Nellai ,Municipal Administration Minister ,K.N. Nehru ,Palai Market ,Nellai Town… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை