- திமுக
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- நெல்லை
- அமைப்புச் செயலாளர்
- ஆர் பாரதி
- பளை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- பாளை…
நெல்லை, ஜன.22: மக்கள் நம்மோடு உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றி உறுதி என பாளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை பகுதி திமுக சார்பில் ஜோதிபுரம் திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அருள் மாணிக்கம் தலைமை வகித்தார். வர்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜேஷ் வரவேற்றார். நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மாநில சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், நெல்லை மாநகர திமுக செயலாளர் சு.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தொகுதி பார்வையாளர்கள் பாளை வசந்தம் ஜெயக்குமார், நெல்லை முத்துச்செல்வி, மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் சுப.சீதாராமன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: தமிழகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து அதிக திட்டங்களை அளித்தது திமுக ஆட்சிதான். 1973-74ம் ஆண்டிலே காவல்துறையில் முதன்முதலாக பெண்களை கலைஞர் நியமித்தார். 25 பெண் காவலர்கள் அப்போது நியமிக்கப்பட்டனர். பெண் கல்வி, சொத்துரிமை ஆகியவற்றை பெற்று தந்ததோடு, இன்று மகளிருக்கு உரிமை தொகையும் இந்த அரசு தருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகள் வென்றதற்கு காரணம் மகளிரின் ஓட்டுகளே ஆகும். பல வாக்குசாவடிகளில் பெண்களின் ஓட்டுக்கள் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை திமுகவிற்கு விழுந்தன. ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு சலுகைகள், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஆகியவற்றால் திமுகவின் வாக்கு வங்கி வலுவாக உள்ளது.
நாடகமாடுவதில் வல்லவர்கள் என நம்மை பார்த்து ஒரு இளைய தலைவர் பேசுகிறார். அவரே சினிமாவில் நடித்துதான் இந்நிலைக்கு வந்துள்ளார். பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதை பொதுமக்களே விரும்புகின்றனர். அதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களிலும் திமுகவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் அங்கு சென்று பொதுமக்களை சில தலைவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். சீமானுக்கு தன் கட்சியின் பெயரை நாம் தமிழர் என வைத்து கொள்ள யோக்கியதை இல்லை. 1969ம் ஆண்டிலே நாம் தமிழர் கட்சி திமுகவோடு இணைந்துவிட்டது, இப்போது நாம் நீதிமன்றத்திற்கு சென்றால், அவரது நிலை என்னவாகும்?. மக்கள் எப்போதும் நம்மோடு உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றி உறுதி. ஸ்டாலினை நாம் மீண்டும் முதல்வர் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் அப்துல் கையூம், தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் அலிப் மீரான், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜ வர்மன், மேலப்பாளையம் பகுதி துணை செயலாளர் ஆமீனா சாதிக், சுகாதார குழு சேர்மன் ரம்ஜான் அலி, சாதிக் அலி, சுற்றுசூழல் அணி பெரோஸ்கான், இளைஞரணி சாலி மௌலானா, வட்ட செயலாளர்கள் பத்மராஜ், ஜெயின் உசைன், ராபர்ட் செல்லையா, கேபிள் குமரேசன், அந்தோணி, முறுக்கு சாகுல், மாரிமுத்து, ஆவின் கல்யாணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் காசி மணி, திமுக நிர்வாகிகள் வேங்கை வெங்கடேஷ், செளந்திரம், ராஜேஸ்வரி, ராஜா அப்பாஸ், பேச்சாளர்கள் சிபா.ராவணன், மைக் மணி, நெல்லை முத்தையா, மில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 32வது வட்ட திமுக செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார், ஏற்பாடுகளை பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை செய்திருந்தார்.
The post 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றி உறுதி appeared first on Dinakaran.
