திண்டிவனம், ஜன. 22: திண்டிவனம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி சென்ற வாலிபர் மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் நேற்று முன்தினம் இரவு பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (24) என்பவருடன் திண்டிவனம், செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்றார். அங்கு இருவரும் மது வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் ஒரத்தி கிராமத்திற்கு நண்பரை பார்க்க சென்றுவிட்டு மீண்டும் திண்டிவனம் நோக்கி வந்தனர். கீழ் அத்திவாக்கம் அருகே வந்தபோது பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றுள்ளது. இதனால் 2 பேரும் சேர்ந்து அந்த வழியே வந்த ஒருவரை மடக்கி செல்போன், பணம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றபோது இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் அதிகாலை 4 மணியளவில் ஒலக்கூர் எல்லை அருகே சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாய நிலம் வழியே சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் மணிகண்டன் தப்பித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த மணிகண்டன் இதுகுறித்து ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் இருப்பது குறிப்பிடத்தக்கது. வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி சென்ற வாலிபர் மின் கம்பியில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி appeared first on Dinakaran.
