×

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்..!!

வாஷிங்டன்: உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நேற்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்றது. அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விழாவில் பங்கேற்றார். டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்வது தான் டொனால்ட் டிரம்ப் முதல் கையெழுத்தாக அமைந்துள்ளது. அதில் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவுகளில்,

* அமெரிக்காவில் இனி ஆண் – பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

*ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை. சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும்.

* 2021ல் கேபிடல் கட்டடம் சூறையாடல் சம்பவத்தில் தனது ஆதரவாளர்கள் 1,500 பேர் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து பொது மன்னிப்பு.

*பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் கையெழுத்து.
முதல் ஆட்சிக்காலத்திலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தார்.

*அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. எல்லை பலப்படுத்தப்படும். சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவு

*உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் கையெழுத்திட்டு இருந்தார்.

*கட்டுப்பாடுகளை தளர்த்தி புதைபடிவ சுரங்கங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி உலகெங்கும் எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பைடன் ஆட்சியில் அளித்து வந்த ஆதரவுகள் திரும்பப் பெறவும் திட்டம்.

*மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என அழைக்கப்படும்.

*பனாமா கால்வாயை தற்போது சீனா கட்டுப்படுத்துகிறது. கால்வாயின் நிர்வாக உரிமையை பனாமாவிடம்தான் அமெரிக்கா ஒப்படைத்தது. பனாமா கால்வாயை அமெரிக்கா திரும்பப் பெறும் என்றும் அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்தார்.

 

The post உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்..!! appeared first on Dinakaran.

Tags : President Trump ,United States ,World Health Organization ,Washington ,Kamala Harris ,Vice President ,Democratic Party ,US presidential election ,President Donald… ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...