- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- பாஸ்கர்
- கடு வேலனந்தல்
- காட்போம்மன் தெரு
- திருவண்ணாமலை டவுன்
- டிசி, பாலம்
- தின மலர்
திருவண்ணாமலை, ஜன. 19: திருவண்ணாமலை டவுன் கட்டபொம்மன் தெருவில் காட்டு வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் இதேபகுதியில் ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடை சுமார் 20 வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த கடையில் 4 ஏ.சி. எந்திரத்திற்கு நிரம்பும் கியாஸ் சிலிண்டர்கள் 4 உள்பட சுமார் ₹5 லட்சத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் இருந்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையில் பணிகளை முடித்து கொண்டு தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு வந்து அவர் பணிகளை செய்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் கடையை பூட்டி விட்டு அருகில் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதனால் இந்த கடையின் அருகில் உள்ள வீடுகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் உடனடியாக கடைக்கு வந்த பாஸ்கர் கடையை திறந்து பார்த்தார். கடைக்குள் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. மேலும் கடையில் இருந்த ஏ.சி. கியாஸ் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து தீ சாலை வரையிலும் மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கட்டபொம்மன் தெரு என்பது காலை முதல் இரவு வரை மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இதனால் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலர் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் தீ விபத்து குறித்து திருவண்ணாமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ விபத்து ஏற்பட்ட கடையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் கடையில் இருந்த மற்ற 3 கியாஸ் சிலிண்டர்களையும் மீட்டனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் கடையில் இருந்த ₹5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஏசி காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர் திருவண்ணாமலையில் இயந்திரங்கள் பழுது பார்க்கும் கடையில் appeared first on Dinakaran.
