×

தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு 30ம் தேதி வரை நீதிமன்ற காவல்

* அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார்
* பன்னீர்செல்வம் கொலை வழக்கு வெளியே வந்தது எப்படி என பரபரப்பு தகவல்

சென்னை: கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான பாம் சரவணனை, கடந்த புதன்கிழமை இரவு, வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் பகுதியில் போலீசார் சுற்றிவளைத்தபோது, தப்பிக்க முயன்றதால், காலில் சுட்டு பிடித்தனர். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் தங்கும் வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், பாம் சரவணனை வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற 10வது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டார்.

இதனிடையே, பாம் சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ள வாக்குமூலத்தில், கோயம்பேடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி பன்னீர்செல்வத்தை ஆந்திர எல்லைக்கு அழைத்துச் சென்று எரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே இந்த கொலை குறித்து கோயம்பேடு போலீசார் பாம் சரவணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது யார் யார் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாம் சரவணனை பிடித்த போது போலீசார் பல்வேறு வழக்குகள் குறித்தும், நாகேந்திரன் தரப்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் போலீசார், பன்னீர்செல்வம் கொலை வழக்கு சம்பந்தமாக ஏதும் கேட்கவில்லை. இதையடுத்து, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், பன்னீர்செல்வம் கொலை வழக்கு சம்பந்தமாக பாம் சரவணனிடம் கேட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பூந்தமல்லி பகுதியில் வைத்து பன்னீர்செல்வம், சதீஷ், அவரது தம்பி ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து அன்பழகன் என்ற தலைமை காவலரை போதையில் வெட்டி உள்ளனர்.

அப்போது பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும், அப்போது திருவேற்காட்டில் உதவி ஆய்வாளராக இருந்த சரவணன் மடக்கி பிடித்துள்ளார். அப்போது பன்னீர்செல்வம் குறித்த அனைத்து தகவல்களையும் உதவி ஆய்வாளராக இருந்த சரவணன் சேகரித்துள்ளார். அதன் பிறகு பன்னீர்செல்வம், கோயம்பேடு பகுதியில் காணாமல் போனபோது அனைத்து காவல் நிலையங்களுக்கும் அந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இந்த தகவலை சரவணன் சேகரித்து வைத்துள்ளார். அப்போது ரவுடிகள் தரப்பில் பாம் சரவணன் தரப்பினர் பன்னீர் செல்வத்தை கொன்றுவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அது குறித்த எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலும், பன்னீர்செல்வம் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திருவேற்காடில் உதவி ஆய்வாளராக இருந்த சரவணன், தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவர், பாம் சரவணனை போலீசார் சுட்டு பிடித்த போது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மாயமான பன்னீர்செல்வம் குறித்து தனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் கூறி விசாரணை செய்துள்ளார். அப்போது, பாம் சரவணன் பன்னீர்செல்வத்தை கடத்தி, எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், 8 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பன்னீர்செல்வத்தின் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

The post தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Rawudi Bam Saravanan ,Paneer Selvam ,Chennai ,Bam Saravana ,Armstrong ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்