×

கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது ‘வேஷ்டி’ அணிந்து பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

கேன்ஸ்: பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கிய நிலையில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு பங்கேற்றார். பிரான்ஸ் நாட்டில் நேற்று தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா வரும் 27ம் தேதி வரை மத்திய தரைக்கடற்கரையை ஒட்டியுள்ள ரி-சாா்ட் நகரான பிரான்ஸ் ரிவியராவில் நடக்கிறது. இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க ஒன்றிய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான இந்தியக்குழு சென்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் இந்திய தூதரக பொறுப்பாளர் தீபக் பன்சால் மற்றும் செயலர் பிஜு ஜோசப் ஆகியோர் எல்.முருகனை வரவேற்றனர். கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளான நேற்று சிவப்புக் கம்பளத்தில் தமிழ்ப் பாரம்பரிய உடையான ‘வேஷ்டி’ அணிந்து, தென்னிந்திய மற்றும் தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தை எல்.முருகன் வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், அமைச்சர் எல்.முருகன் அணியும் சட்டையில் இடது பக்கம் தேசியக் கொடியும், வலது பக்கம் ஜி-20 லோகோவும் இடம்பெற்றிருந்தது. ஒன்றிய அமைச்சருடன் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட புகழ் திரைப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா, இந்திய நடிகை (மிஸ் வேர்ல்ட் 2017) மனுஷி சில்லர், இந்திய திரைப்பட நடிகை ஈஷா குப்தா, மணிப்புரி நடிகர் கங்காபம் டோம்பா ஆகியோரும் சென்றுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நான்கு இந்திய திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளன. கடந்த ஆண்டு கேன்ஸில் இந்தியா ‘கவுரவ நாடு’ என இருந்தது. சமீபத்திய ஆஸ்கர் விருதுகளில் உலகையே ஆட்டம்போட வைத்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஆவணப்பட குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆகியவை இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது ‘வேஷ்டி’ அணிந்து பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Cannes Film Festival ,Union Minister ,L. Murugan ,Cannes ,France ,Mediterranean ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...