×

டெல்லி மதுபான கொள்கை கெஜ்ரிவால் முடிவால் ரூ.2,026 கோடி இழப்பா? பாஜ விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை காரணமாக அரசுக்கு ரூ.2,026கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கணித்துள்ள நிலையில், இந்த அறிக்கை முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அம்பலப்படுத்தி உள்ளதாக பாஜ விமர்சித்துள்ளது. டெல்லியில் பாஜ தலைவர் அனுராக் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘‘சிஏஜி அறிக்கையானது மதுபான கொள்கை குறித்த 10 முக்கிய விஷயங்களை கொண்டுள்ளது. இந்த கொள்கை சர்ச்சை காரணமாக ஆம் ஆத்மி அரசினால் ரத்து செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிஏஜி அறிக்கையால் எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பணத்தை யார் பாக்கெட்டில் போட்டார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். கெஜ்ரிவால் இந்த ஊழலின் முக்கிய குற்றவாளி” என்றார்.  இதேபோல் பாஜ தலைவர் ஜேபி நட்டா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘சிஏஜி அறிக்கையானது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது. அதிகார போதையால் அதிகளவில் தவறான நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது.

மதுபானம் போன்றவற்றில், ஆம் ஆத்மியின் டிஏ மாடல் கொள்ளையானது முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அரசு தேர்தலில் வாக்களித்து வெளியேற்றப்பட்டு அதன் தவறுகளுக்காக தண்டிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் இது நடந்துள்ளது. மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கையானது கொள்கை அமலாக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி அரசின் குறைபாடுகளை அம்பலப்படுத்துகின்றது. இதனால் அரசின் கருவூலத்திற்கு ரூ.2026கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி மதுபான கொள்கை கெஜ்ரிவால் முடிவால் ரூ.2,026 கோடி இழப்பா? பாஜ விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Kejriwal ,BJP ,New Delhi ,CAG ,Delhi government ,Chief Minister ,Arvind Kejriwal ,Anurag Thakur ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு