சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்தை கண்டித்து, பாஜ மாநில இளைஞர் அணி சார்பில் மெரினா உழைப்பாளர் சிலை அருகே நேற்று முன்தினம் போலீசாரின் தடையை மீறி கையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்த ஒன்று கூடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன் அறிவிப்பு மற்றும் எந்த அனுமதியும் பெறாமல் தடை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர்.
ஆனால் பாஜ இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு பேரணியாக சென்று போராட முயன்றனர். உடனே போலீசார் அனைவரையும் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர். அதனை தொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் உள்பட 51 பேர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மெரினாவில் போராட முயன்ற பாஜவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.