×

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதயில் சிதிலமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சியின், பயணத்தின் தொடக்கமாக 8வது நாளான இன்று (09.01.2025) சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 59-வது வார்டு, அருள்மிகு ஶ்ரீ பாடிகாட் முனீஸ்வரர் கோயில் எதிரில் உள்ள முத்தையா சத்தியவாணி முத்து நகரில் (எம்.எஸ். நகர்) வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து,

அப்பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்த போது, சிதிலமடைந்த கட்டடத்தை உடனடியாக சரி செய்து தருமாறும், அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அமைச்சரிடம் விளையாட்டுத் திடலை மேம்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர், உடனடியாக ஏற்படுத்தி தருமாறும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் பரிதா பானு, செயற்பொறியாளர் திருசொக்கலிங்கம், மின்சார வாரிய செயற்பொறியாளர் பிரேம்குமார், பகுதி செயலாளர் எஸ்.முரளி, வட்ட செயலாளர் பிரபாகரன், மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

சீமான் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் தெரிவித்ததாவது:

கரைந்து கொண்டிருக்கின்ற இயக்கமாக அவருடைய இயக்கம் மாறிக்கொண்டு உள்ளது ஆதலால் ஏதாவது ஒன்றை இப்படி பேசி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக செய்கின்ற முயற்சிகள் தான் இது. அதற்காகவே ரூம் போட்டு சிந்திப்பார் என்று நினைக்கின்றேன், தினந்தோறும் வாழ்ந்து மறைந்த தலைவர்கள், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், இருட்டிலிருந்த இந்த சமுதாயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தலைவர்கள், விடிவெள்ளிகள், பகுத்தறிவுவாதிகள் போன்றவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன்னுடைய பெயர் அடையாளப்படுத்த முடியும் என்பதற்காக இவ்வாறு பேசுகிறார். கரைந்து கொண்டிருக்கின்ற அந்த இயக்கத்தை அவர் காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர வாழ்ந்து மறைந்தவர்கள், இந்த நாட்டிற்காக தொண்டாற்றியவர்கள் பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடன் தெரிவித்தார்.

The post துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Port Assembly Constituency ,Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED வங்கியில் வைப்பு நிதியாக...