×

ஆரணி சூரியகுளம் பகுதியில் கழிவுநீர் தேங்கியதால் சடலத்தை உறவினர் வீட்டுக்கு தூக்கி சென்ற உறவினர்கள்-புதிய கால்வாய் அமைக்க கோரிக்கை

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட  கழிவுநீர் கால்வாய்கள், பக்கா கால்வாய்கள் பழுதடைந்து விட்டதால், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார்  தெரிவித்தும் இதுவரை எந்த  நடவடிக்கை எடுக்க வில்லையாம். இந்நிலையில், ஆரணி டவுன் சூரியகுளம் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யர் தெருவில்  மோகன் (55) என்பவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால்,  அவரது சடலத்தை அஞ்சலிக்காக வீட்டின் வெளியே வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வீடுகளை சுற்றிலும் அந்த தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால், உறவினர்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை. உடனே, அவரது குடும்பத்தினர் சடலத்தை  கழிவுநீரில் நடந்தபடியே காந்திநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு சென்று அங்கு வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆரணி கொசப்பாளையம்  திருமலைசமுத்திரம் ஏரியிலிருந்து பாரதியார் தெரு, என்எஸ்கே‌ நகர், விஸ்வேஸ்வரய்யர் தெரு ஆகிய தெருக்கள் வழியாக சூரிய குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாயை தனிநபர்கள் பலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள்  கட்டி உள்ளனர். இதனால், அப்பகுதிகளில் மழைக்காலங்களில் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதேபோல் விஸ்வேஸ்வரய்யர் தெரு, என் எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி  தேங்கி உள்ள கழிவு நீரை அகற்றுவதுடன் புதிய கால்வாய் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆரணி சூரியகுளம் பகுதியில் கழிவுநீர் தேங்கியதால் சடலத்தை உறவினர் வீட்டுக்கு தூக்கி சென்ற உறவினர்கள்-புதிய கால்வாய் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arani Suriyakulam ,Arani ,Arani Municipality ,Tiruvannamalai District ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு