×

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வால்பாறையில் கடையடைப்பு; ஆர்ப்பாட்டம்

வால்பாறை: ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வால்பாறையில் கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஒன்றிய வன அமைச்சகத்தால் 36 நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல வரைவு அறிவிப்பு தமிழ்நாட்டின் 183 கிராமங்களை அதிரவைத்துள்ளது.

உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் மற்றும் வழிகாட்டல் நெறிமுறைகள் இந்த வரைவு ஆணையில் உள்ளன. ஒன்றிய அரசின் இந்த வரைவு ஆணை தமிழ்நாடு மலை கிராமங்களில் பதற்றத்தையும், பீதியையும் அதிகரித்து உள்ளது. அறிவிப்பு தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியாகி 35 நாட்கள் முடிவுற்றுள்ளது. வால்பாறை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக எல்லையோரங்களில், ஆனைமலை முதல் கொடைக்கானல் வரை ஆட்சேபனை தெரிவிக்க பல தரப்பினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆழியார் முதல் வால்பாறை வரை உள்ள மக்கள் பயன்படுத்தும் சாலையை இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைபடத்தில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், புலிகள் காப்பகத்தின் வெளி வட்ட பகுதிக்குள்ளாகவே கேரளாவைப்போல முடித்துக்கொள்ள வேண்டும் என கேட்டும் ஜன 7ம் தேதி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வால்பாறை உரிமை மீட்பு குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று வால்பாறை, சோலையாறு அணை, முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டன. பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்துக்கு வாகன ஓட்டுநர் சங்கம், தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. கடையடைப்பு மற்றும் போராட்டம் காரணமாக வால்பாறை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி வால்பாறை காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வால்பாறையில் கடையடைப்பு; ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Valparai ,Union Ministry of Environment, Forest and Climate Change ,Anaimalai Tiger Reserve ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...