- ஆர்.என்.ரவி
- முதல்வர் மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- கவர்னர்
- ஆர் என் ரவி
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ‘தமிழ்த்தாய்’ வாழ்த்தை முதலில் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையை படிக்காமலேயே பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது, சட்டமன்ற மாண்பை மதிக்காத, சிறுபிள்ளைத்தனமான செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4வது ஆண்டின் முதல்கூட்டம் நேற்று நடந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் 2025ம் ஆண்டு சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். சபாநாயகரின் அழைப்பை ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஏற்றுக் கொண்டார். அதன்படி, தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. முன்னதாக காலை 9 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு வரத் தொடங்கினர். காலை 9.27 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டார். காலை 9.22 மணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்குள் வந்தார். சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சரியாக 9.24 மணிக்கு தலைமை செயலக வளாகத்துக்குள் வந்தார். அவருக்கு போலீஸ் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆளுநரை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சிவப்பு கம்பள வரவேற்புடன் பேரவைக்கு ஆளுநர் அழைத்து வரப்பட்டார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.
சரியாக காலை 9.29 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்குள் வந்தார்.
இதை தொடர்ந்து, பேரவை கூட்டம் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி படிக்க எழுந்தார். அவர் முதலில் அனைவருக்கும் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் அவர்கள் சட்டையில் ‘யார் அந்த சார்?’ என்று பேட்ஜ் குத்தி இருந்தனர். அதேபோன்று அவர்கள் மறைத்து வைத்திருந்த பதாகையை தூக்கி பிடித்தபடி அவைக்குள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இந்த கோஷத்துக்கு நடுவே ஆளுநர் ஆர்.என்.ரவி, கவர்னர் உரையில் இல்லாத வார்த்தையை சொந்தமாக மைக்கில் படித்தார். ஆனால், சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தெளிவாக கேட்கவில்லை. அதேநேரம், காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் முன்பகுதிக்கு வந்து ஆளுநர் இருக்கைக்கு எதிரே நின்று கோஷங்களை மாற்றி மாற்றி எழுப்பி கொண்டிருந்தனர். காங்கிரஸ் உறுப்பினர் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இவர்கள் கோஷத்துக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் மைக்கில் சத்தமாக பேசிக் கொண்டிந்தார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி \”கவர்னர் உரையின் தொடக்கத்தில் முதலாவது தேசியகீதம் பாடப்பட வேண்டும். ஆனால் தேசீயகீதம் பாடப்படவில்லை\” என்று கூறி திடீரென சட்டப்பேரவையில் இருந்து ஆர்.என்.ரவி வேகமாக அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் சுமார் 3 நிமிடம் மட்டுமே இருந்தார். அப்போது, தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரையில் இருந்து ஒரு வரிகூட படிக்காமல் புறக்கணித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து 3வது ஆண்டாக இதுபோன்ற காரணத்தை கூறி தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி வருகிறார்.
ஆளுநர் வெளியேறிய பிறகும் அதிமுக உறுப்பினர்கள் அவையின் முன்பக்கம் நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘‘அதிமுக உறுப்பினர்கள் திட்டம் போட்டு அவைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் இருக்கைக்கு உடனடியாக செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் அவையின் முன்பகுதியில் நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‘‘அவைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்’’ என்றரார். இதையடுத்து, அவைக்காவலர்கள் சட்டப்பேரவைக்குள் வந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘‘அதிமுக உறுப்பினர்கள் இன்று நடந்து கொண்ட செயல் குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து சரியாக காலை 9.38 மணிக்கு ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் படிக்கத் தொடங்கினார். அப்போது பாஜ உறுப்பினர்களும் நயினார் நாகேந்திரன் தலைமையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
2025ம் ஆண்டின் தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர் ரவி உரையாற்றாமல் புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் உரையாற்றாமல் சென்றது சட்டமன்ற மாண்பை மதிக்காத, சிறுபிள்ளைத்தனமான செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பாஜ, பாமக ஆகியோரும் பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, ‘சட்டமன்ற மரபுப்படி இறுதியில் நாட்டு பண் பாடப்படப்படும் என்று விளக்கம் அளித்தார். அதேபோல சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டம் முடியும்போது தேசியக்கீதம் பாடப்பட்டு, காலை 10.44 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.
The post தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடியதற்கு எதிர்ப்பு பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர்.என்.ரவி: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.