பெரம்பலூர்,ஜன.4: திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கன்னியாகுமரியில் 133 அடி உயரம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை நிறுவப் பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் மற்றும் காவேரி இளைஞர் இலக்கிய திருவிழாவில் வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (03ஆம்தேதி) பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினையொட்டி பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, திருக்குறள் தொடர்பான வினாடி வினா போட்டி என திருக்குறள் தொடர்பாக 3 போட்டிகளும், மற்றும் காவேரி இளைஞர் இலக்கிய திருவிழாவில் 8 போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்தபோட்டிகளில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். திருக்குறள் தொடர்பான போட்டிகள் மற்றும் காவேரி இளைஞர் இலக்கிய திருவிழாவில் முதல் இடத்தினை 13 நபர்களும், இரண்டாம் இடத்தினை 13 நபர்களும், மூன்றாம் இடத்தினை 13 நபர்களும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கலெக்டர் முதல் பரிசாக ரூ5ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ3.ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இளைஞர் இலக்கிய திருவிழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ5.ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடை பெற்ற பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் முத்துக் குமரன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சேகர், இரண்டாம் நிலை நூலகர் இராதை, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகள் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கல் appeared first on Dinakaran.