லக்னோ: உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் 1000 பேர் கொல்லப்படுவார்கள் என்று பதிவிட்ட ரஷ்ய பிரஜையை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் சில நாட்களில் மகா கும்பமேளா நடக்கவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 13ம் தேதி மகா கும்பமேளா நடக்கும் குண்டுவெடிப்பில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்படுவார்கள் என்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியானது. அதையடுத்து உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீசார், அந்த பதிவின் பின்னணி குறித்து ஆய்வு செய்தனர். அந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் டெலிட் செய்யப்பட்டதால், அந்த பதிவின் ஐபி முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில், அந்த பதிவை ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி போஃப்கோவ் என்பவர் பதிவிட்டதும், அவர் இந்தியாவில் இருந்து கொண்டே இந்த பதிவை வெளியிட்டதும் தெரியவந்தது. அதையடுத்து தனிப்படை மற்றும் சைபர் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், நொய்டாவின் செக்டார் 15ல் மகா கும்பமேளா பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் தங்கியிருந்த ஆண்ட்ரி போஃப்கோவ் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது விசா காலம் காலாவதியான நிலையில் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருப்பதாக தெரிந்தது. அதையடுத்து அவரை ெடல்லியில் இருக்கும் ரஷ்ய தூதரகத்திடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் 1000 பேர் கொல்லப்படுவார்கள்: ரஷ்ய பிரஜை அதிரடி கைது appeared first on Dinakaran.