×

ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி: 2 ேபர் படுகாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்தவர் வரிசைக்கனி (65). இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த அனிஸ் பாத்திமா (43), ஜாபர் சாதிக் (43), தாகாஷா (26) ஆகியோர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸை சையது அர்ஷத் ரகுமான் (30) ஓட்டி வந்துள்ளார்.

வழுதூர் அருகே தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது ஆம்புலன்சுக்கு முன்னால், ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு மரத்துண்டுகளை ஏற்றி சென்ற லாரியை டிரைவர் பெட்ரோல் பங்கில் டீசல் போடுவதற்காக வேகத்தை குறைத்து ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, பின்னால் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விலகி செல்ல முயன்றுள்ளார். ஆனால், எதிரே திடீரென பஸ் வந்ததால், டிரைவர் பிரேக் அடிக்க முயன்றும் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்து அப்பளம்போல நொறுங்கியது.

இதில் வரிசைக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அனீஸ் பாத்திமா, ஜாபர் சாதிக், தாகாஷா, டிரைவர் சையது அர்ஷத் ரகுமான் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை கேணிக்கரை போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அனீஸ் பாத்திமா, ஜாபர் சாதிக் உயிரிழந்தனர். டிரைவர் சையது அர்ஷத் ரகுமான், தாகாஷா ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

2 பஸ்கள் மோதல்: 25 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே, ஆலங்குளத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதேபோல் முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு டவுன் பஸ் வந்துள்ளது. உத்தரகோசமங்கை அருகே, ஆலங்குளம் என்ற இடத்தில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பஸ்களிலும் இருந்த 25 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி: 2 ேபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Varadhikani ,Maraikayarapattanam ,Mandapam ,Ramanathapuram district ,
× RELATED ராமநாதபுரம் அருகே லாரி மீது...