திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லையால் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அதிபர் கல்லூரி கட்டிடத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் அசீஸ் தாஹா (66). இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரகுளம் பகுதியில் தன்னுடைய பெயரிலேயே ஒரு பொறியியல் கல்லூரி நடத்தி வந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இவர் பொறியியல் கல்லூரியை தொடங்கினார். திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அசீஸ் திருவனந்தபுரத்தில் உள்ள பேயாடு என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக முகம்மது அப்துல் அசீஸ் தாஹா கல்லூரியிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்தக் கல்லூரியில் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் தீ எரிவதை காவலாளி பார்த்தார். அவர் அங்கு சென்று பார்த்தபோது ஒருவரது உடலில் தீ பற்றி எரிந்து கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் நெடுமங்காடு போலீசுக்கும், தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த நபரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் அந்த நபர் அந்த இடத்திலேயே கருகி உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தீயில் கருகி உயிரிழந்தது கல்லூரியின் உரிமையாளர் முகம்மது அப்துல் அசீஸ் தாஹா என தெரியவந்தது.
கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் கடன் பிரச்னை காரணமாக யாரேனும் அவரை எரித்து கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நெடுமங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தனியார் கல்லூரி அதிபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திருவனந்தபுரம் அருகே தனியார் இன்ஜி. கல்லூரி அதிபர் தீக்குளித்து தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம் appeared first on Dinakaran.