×

ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது பயிற்சிகள் செய்ய பொம்மை வீரர் பயணத்துக்கு ‘ஹைட்ராலிக் வேன்’

சிவகங்கை: சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பொம்மைகளை கொண்டு குத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. காளைகளை அழைத்து செல்ல அதிநவீன ஹைட்ராலிக் வாகனங்கள் பயன்படுத்துவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை அருகே கீழக்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். இலங்கையில் உள்ள இளைஞர் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். இவர் ஏற்கனவே இலங்கையில் அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருடைய தோப்பில் காங்கேயம், புலிக்குளம், கண்ணாவரம், இடிச்சாலி, மலைமாடு, ஆந்திரா (கிர் வகை) வகைகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார்.
இந்த காளைகள் அனைத்தும் இந்தாண்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் சிராவயல், அரளிப்பாறை, சிங்கம்புணரி, புதூர், கண்டிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருச்சி உறையூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக காளைகள் அனைத்திற்கும் நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மண் குத்து பயிற்சி ஆகியவை வழங்கப்படுவதுடன் சத்தான ஆகாரங்களும் வழங்கப்படுகிறது.

இதுபோக, மாடுபிடி வீரர்கள் எந்த திசையில் இருந்து வருவார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களை குத்தும் வண்ணம், தமிழகத்திலேயே முதல் முறையாக மாடுபிடி வீரரை போன்ற பொம்மை ஒன்றை வைத்து காளைகளுக்கு குத்து பயிற்சி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்துச் செல்ல ஏ.சி வசதியுடன் கூடிய கேரவனை அறிமுகப்படுத்தியவர் செந்தில் தொண்டமான். இந்த ஆண்டு சிறுபாதைகளில் கூட சென்று காளைகளை களத்தில் இறக்க சுற்றிலும் ஹைட்ராலிக் உதவியுடன் இயங்கக்கூடிய கதவுகளை கொண்ட மினி வேன்களை களம் இறக்கியுள்ளார். இது இப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துணை முதல்வர் துவக்குகிறார்
மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டாகும். இத்தகைய ஜல்லிக்கட்டு தடைபட்டபோது முதலில் சட்டப் போராட்டம் கண்டு மீட்டுக் கொடுத்தவர் கலைஞர். அதேபோல் மீண்டும் தடை கண்ட ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை நாடே அறியும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதை துவக்கி வைக்க இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதுதொடர்பாக மதுரை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வரும் 3ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை ஆலத்தூரில் நடைபெறுகிறது என கூறியுள்ளார்.

The post ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது பயிற்சிகள் செய்ய பொம்மை வீரர் பயணத்துக்கு ‘ஹைட்ராலிக் வேன்’ appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Sivaganga ,SENTHIL DONDAMAN ,KALAKKOTA ,SIVANGAI ,Sri Lanka ,
× RELATED அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்...