×

திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்

சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மகளின் துப்பட்டாவிலேயே உயிர் பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் காமராஜ் (64). பிரபல சின்னத்திரை நடிகையான இவரது மகள் விஜே சித்ரா, வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவான்மியூர் ராஜாஜி நகரில், மகள் சித்ரா வாங்கிய வீட்டிலேயே, அவரது தந்தை காமராஜ், அவரது மனைவி விஜயா (62), பேத்தி ரேணுகா (19) ஆகியோர் வசித்து வந்தனர். மகள் சித்ரா இறந்த நாள் முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த காமராஜ், மகள் சித்ராவின் அறையில் தனியாக தூங்குவாராம். சித்ராவின் தாய் விஜயா, நேற்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து காமராஜிடம் குடிக்க பால் கொண்டு வரட்டுமா என கேட்டுள்ளார். அதற்கு, காமராஜ் பால் வேண்டாம் என கூறியுள்ளார். பிறகு, விஜயா அவரது படுக்கை அறைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், 7 மணியாகியும் காமராஜ் அறையிலிருந்து வெளியே வராததால், மனைவி விஜயா, அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மகள் சித்ராவின் துப்பட்டாவால், மின்விசிறியில் கணவன் காமராஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, கதறி அழுதார். திருவான்மியூர் போலீசார், காமராஜின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர் appeared first on Dinakaran.

Tags : Chitra ,Chennai ,Kamaraj ,Chennai Metropolitan Police Department ,
× RELATED சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை...