சென்னை: தமிழகத்தில் 2024ம் ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை 33 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இந்நிலையில், தற்போது புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதை அடுத்து ஜனவரி 7ம் தேதி முதல் பொங்கல் வரையில் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் இயல்பாக பெய்யவேண்டிய மழை அளவைவிடக்கூடுதலாக 33 சதவீதம் மழை பெய்துள்ளது. பொதுவாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், டிசம்பர் இறுதியுடன் பருவமழை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜனவரி மாதத்தில் மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது வட கிழக்கு பருமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.
இருப்பினும், திருப்பத்தூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், தஞ்சாவூர், சென்னை, கடலூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
அதன் காரணமாக இன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 6ம் தேதி வரையில் இதே நிலை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வரவுள்ள நிலையில், பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ெதன்மேற்கு பருவமழை காலத்தில் 18 சதவீதமும், வட கிழக்கு பருவமழை 33 சதவீதம், ஆண்டுக் கணக்கில் 28 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருமழை 27 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. ஆண்டுக்கணக்கின்படி பார்த்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் செப்டம்பர் மாதம் தவிர மற்ற மாதங்களில் சற்று அதிகமாக இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தென் மேற்கு பருவமழை என்பது இயல்பைவிட 64 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
வட கிழக்கு பருவமழையில் அக்டோபர் மாதத்தில் 214 மிமீ, நவம்பர் மாதம் 140 மிமீ, டிசம்பர் மாதத்தில் 235 மிமீ, ஆக கடந்த 3 மாதத்தில் 590மிமீ பதிவாகியுள்ளது. இயல்பில் இருந்து விலகல் என்று பார்க்கும் போது அக்டோபர் மாதம் 25 சதவீதம் அதிகம். நவம்பர் மாதம் 23 சதவீதம் குறைவு,டிசம்பர் மாதம் 164 சதவீதம் அதிகம். மொத்தமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 33 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 சதவீதம் மட்டுமே அதிகமாக இருந்தது.
குறிப்பாக நாம் பார்க்கும் போது இந்த ஆண்டில் வட கிழக்கு பருவமழையின் போது பெஞ்சல் புயலால் அதிக மழை பெய்தாலும், பின்னர் வந்த ஆழ்ந்த காற்ழுத்த தாழ்வு பகதி காரணமாக மழை பெய்துள்ளது. மாவட்ட அளவில் தென் மேற்கு பருவமழை காலத்தில் நெல்லையில் இயல்பைவிட 218 சதவீதம் அதிகம். அதேபோல 16 மாவட்டங்களில் அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்லை ஒட்டியும் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது நெல்லை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. 23 மாவட்டங்களில் இயல்லபை விட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பாகவும் மழை பெய்துள்ளது. ஆண்டுக்கணக்கின்படி பார்த்தால் திருநெல்வேலியில் அதிமாக மழை பெய்துள்ளது. மாவட்ட அளவில் பார்க்கும் போது வடகிழக்கு பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்லைவிட குறைவாக பதிவாகவில்லை என்று சொல்லலாம்.
அதாவது 27 மாவட்டங்களில் இயல்லைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைஒட்டியும் மழை பெய்துள்ளது. புயல்களை பொருத்தவரையில் ரேமல், அஸ்மா, ரானா, பெஞ்சல் இந்த ஆண்டு உருவானது. கடந்த ஆண்டு 6 புயல் உருவானது. இந்த ஆண்டில் வங்கக் கடலில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் காற்று அலை, சிறப்பாக இருந்ததால் வடகிழக்கு பருவமழைக்கு அது சாதகமாக இருந்தது. இந்நிலையில், இந்த வடகிழக்கு பருவமழை பொங்கல் வரைக்கும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கு பிறகு தான் வட கிழக்கு பருவமழை விலகல் குறித்து தெரியும். ஜனவரி 7ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டுக்கான பருவமழை அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி வரை பருவமழை பெய்து முடிந்தது. இந்த ஆண்டுக்கான விலகல் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
The post வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் கூடுதல்: பொங்கல் வரை மழை நீடிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.