×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யயன உற்சவம் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்சவம் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன் ரங்கநாதர் மண்டபத்தில் அத்யயன உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 25 நாட்கள் இந்த உற்சவம் நடக்கும். அதன்படி வைகுண்ட ஏகாசியை முன்னிட்டு நேற்றிரவு திருமலை ஏழுமலையான் கோயிலில் அத்யயன உற்சவம் தொடங்கியது.

முதல்நாளான நேற்றிரவு ரங்கநாயக மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், கிழக்கு திசையை நோக்கி ராமானுஜரும் காட்சி தந்தனர். இதில் பெரியஜீயர் மற்றும் சின்ன ஜீயர்கள் தலைமையில் அவரது சீடர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யபிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

ரூ.4.10 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 68,298 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 16,544 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.4.10 கோடி காணிக்கை கிடைத்தது. பள்ளி அரையாண்டு விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யயன உற்சவம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Adhyayana Utsavam ,Tirupati Ezhumalaiyan Temple ,Vaikunta Ekadashi ,Tirumalai ,Ranganathar Mandapam ,Margazhi ,
× RELATED கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்...