×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ₹1,000 ஊக்கத்தொகை

*ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் பாவந்தூரில் உள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்ட மாதாந்திர ஊக்கத்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டம் தமிழ்நாடு அரசின் ஒரு மகத்தான திட்டம் ஆகும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்துள்ளார்.

இதன்படி புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகள் ஆகியோர் முதன் முதலில் சேரும் உயர் கல்வி படிப்புக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 பெறலாம்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 என இம்மாதம் முதல் 189 மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 3,863 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.

புதுமைப் பெண் திட்டம் குறித்து மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வின் படி புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் தெரிவித்தது போன்று பெண்கள் கல்வி கற்பது ஒரு சமூக புரட்சி. பெண்களின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சி ஆகும். பெண்களின் கல்வியில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதன்படி காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற உயர்கல்வியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதேபோன்று உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் உயர்வுக்குப்படி, கல்லூரி கனவு போன்ற பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே மாணவ, மாணவியர் தமிழ்நாடு அரசின் திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இதேபோன்று மாணவர்கள் அனைவரும் நன்றாக கல்வி கற்று வேலைவாய்ப்பைப் பெற்று உங்கள் பகுதியின் வளர்ச்சிக்கு காரணமாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.பின்னர் புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவி கங்கா தெரிவித்ததாவது: என் பெயர் கங்கா. நான் திருநாவலூரில் வசித்து வருகிறேன். நான் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் எனக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்துள்ளது. இந்த ஊக்கத்தொகை எனது படிப்பிற்கு உதவியாக இருக்கும்.

நான் சிறப்பாக கல்வி கற்க மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கி புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் புதுமைப் படைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ₹1,000 ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi district ,Athiyar Prasanth ,Rishivandhiyam ,Women ,Rishivandhiyam Government Arts and Science College ,Pavandur, Kallakurichi district… ,Kallakurichi ,
× RELATED சின்னசேலம் அருகே நடந்த கொலை வழக்கு:...