*வன விலங்குகள் தாக்கும் அபாயம்
ஊட்டி : மசினகுடி – தெப்பகாடு செல்லும் வனச்சாலையில் வாகனங்களை நிறுத்தி வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கின்றனர். இச்சமயங்களில் வன விலங்குகள் தாக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது.
இங்குள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதுதவிர முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானை முகாமில் இருந்து யானை சவாரி செய்வதற்காக செல்கின்றனர்.
கார், இருசக்கர வாகனங்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் கல்லட்டி – மசினகுடி மலை பாதை வழியாக முதுமலை செல்கின்றனர். பஸ், வேன் போன்ற கனரக வாகனங்களில் வர கூடியவர்கள் கூடலூர் வழியாக செல்கின்றனர். மசினகுடியில் இருந்து தெப்பகாடு செல்ல கூடிய சாலையானது முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள் செல்கிறது.
இந்த வனங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் சாலையின் ஒரத்தில் உலா வரும். இவற்றை வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் யாரும் சாலையில் இறங்கி வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது என பல இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத சுற்றுலா பயணிகள் மசினகுடி-தெப்பகாடு சாலையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தாக்க கூடிய அபாயம் நீடிக்கிறது.
The post மசினகுடி-தெப்பக்காடு வனச்சாலையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.