×

தொடர் விடுமுறை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல்

*அணிவகுத்த வாகனங்கள்- போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு பிரசித்தி பெற்ற முருகர் கோயில் உள்ளது.

இதனால் தினம்தோறும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் தொடர்ந்து சனி, ஞாயிறு என கடந்த 2 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து புத்தாண்டு விடுமுறையன்றும் ஏராளமானோர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்கள் அதன் அருகே உள்ள முருகர், பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்தனர். மேலும் வனத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா செல்பி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக சுற்றி மகிழ்ந்தனர்.

சாலையில் கார் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து சீர் செய்யும் முறையில் போலீசார் தீவிரம் காட்டினர்.

The post தொடர் விடுமுறை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Jalakambarai ,Tirupattur ,Yelagiri Hills ,Murugan ,
× RELATED மாதந்தோறும் 650 பிரசவங்கள்...