×

மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி நுழைவுத்தேர்வில் பணம் பெற்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? புகாரை தொடர்ந்து விசாரிக்க ஐவர் குழு நியமனம்

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்க நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். இத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பிஎச்டி படிக்க தகுதியுடையவர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பல்வேறு துறைகளுக்கான பிஎச்டி படிப்புக்கான நுழைவுத்தேர்வில் 1,094 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகளில் 200க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சியடைந்ததாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க எவ்வித ஒப்புதலும் இல்லாமல், ஒரு சிலர் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் உயர்கல்வித்துறைக்கு புகார் மனுக்களை அனுப்பினர். இதன் எதிரொலியாக உயர்கல்வித்துறை உத்தரவின் பேரில், கூடுதல் தலைமை செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கன்வீனர் கமிட்டிக்கு ஒரு உத்தரவினை பிறப்பித்தார்.

அதில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிஎச்டி தேர்வில், மதிப்பெண் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து குழு அமைத்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து பேராசிரியர் கணேசன் தலைமையில் சிவகுமார், வரலெட்சுமி, சிவா, ரோஷிதா ஆகிய 5 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி நுழைவுத்தேர்வில் பணம் பெற்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? புகாரை தொடர்ந்து விசாரிக்க ஐவர் குழு நியமனம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kamaraj University ,Thiruparankundram ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி...