×

இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் திடீரென பிரதமரான வரலாற்று பின்னணி: நட்வர்சிங் முதல் ஒபாமா வரை கூறிய தகவல்களின் தொகுப்பு

டெல்லி: இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் மறைந்த மன்மோகன் சிங், திடீரென பிரதமரான வரலாற்று பின்னணி குறித்து நட்வர்சிங் முதல் ஒபாமா வரை கூறிய பரபரப்பு தகவல்களின் தொகுப்பு வௌியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். ‘இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் சிற்பி’ என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங், மிகவும் மென்மையான, நேர்மையான, உயர் படிப்பு படித்தவராவார். அப்படியொருவர் நாட்டின் பிரதமராக ஆன கதை மிகவும் விசித்திரமானது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் வரை, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் அரசு தோல்வியடையக்கூடும் என்று யாருக்கும் தெரியாது.

அனைத்து தேர்தல் ஆய்வாளர்களும் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்றே கூறிக் கொண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பாஜக கூட்டணி பின்தங்கிக் கொண்டே சென்றது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அந்த தேர்தலில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்பார் என்று யூகங்கள் தெரிவித்தன. இருப்பினும் கடந்த 1998ல் சோனியா காந்தி அரசியலில் நுழைந்த உடனேயே, காங்கிரசின் மூத்த தலைவர்களாக இருந்த சரத் பவார் (தற்போது பிளவுபட்ட தேசியவாத காங்கிரசின் தலைவராக உள்ளார்), தாரிக் அன்வர் மற்றும் பி.ஏ.சங்மா போன்ற தலைவர்கள், சோனியா காந்தியை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனக் கூறி கட்சியை விட்டு வெளியேறி ஜூன் 10, 1999 அன்று ஒரு புதிய கட்சியை தொடங்கினர்.

இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக இருந்தது. சரத் பவார் முதல் லாலு பிரசாத் யாதவ் வரை பல தலைவர்களும் சோனியா காந்தி பிரதமராக வருவார் என்று கூறிக்கொண்டிருந்தனர். 2004 தேர்தல் முடிவானது சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறிய பிரச்னை முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்று பாஜக மூத்த தலைவர்களாக இருந்த சுஷ்மா சுவராஜும் உமாபாரதியும் கூறிய போது, பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் அமைதியாக இருந்தனர். சோனியா காந்தி பிரதமராக பதவியேற்றால், தான் மொட்டையடித்துக் கொள்வேன் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். அதனால் சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பது என்பது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.

காங்கிரஸ் தலைமையகத்தில், அக்கட்சியின் தொண்டர்கள் சோனியா காந்திக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தைப் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான ‘ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்’ சில விசயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், ‘மே 17,2004 அன்று, பிற்பகல் 2 மணியளவில், 10 ஜன்பத்திற்கு (சோனியா காந்தியின் அதிகாரபூர்வ வீடு) சென்றேன். உள்ளே என்னையும் மேலும் சிலரையும் அழைத்தனர். அங்குள்ள அறையின் சோபாவில் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். அவர் மிகவும் அமைதியற்ற நிலையில் இருந்தார். மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது சோனியாவிடம் பேசிய ராகுல் காந்தி, ‘நீங்கள் பிரதமர் ஆக வேண்டிய அவசியமில்லை.

என் தந்தை கொலை செய்யப்பட்டார்’ என்று கூறினார். அவரது பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. 24 மணி நேரத்தில் பதிலளிக்குமாறு தனது தாய் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி அவகாசம் கொடுத்தார். தனது தாய் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ராகுல் காந்தி கூறினார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இடத்தில் மன்மோகன் சிங் அமைதியாக இருந்தார். ராகுல் காந்தியால் எதையும் செய்ய முடியும். ராகுல்காந்தியின் பிடிவாதம் சோனியா காந்தியை யோசிக்க வைத்தது. அவர் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இல்லை. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நட்வர் சிங் மற்றும் வி.பி.சிங் ஆகியோர் சோனியா காந்தியின் குழந்தைகள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியதால், சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்று தன்னிடம் கூறியதாக நீரஜா சவுத்ரி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அன்றைய சூழலில் வி.பி.சிங் அவர்கள், சோனியா காந்திக்கு ஆதரவாக இருந்தார். அப்போது நாங்கள் வி.பி.சிங்கை பிரதமராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் சோனியாவின் குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வதை விரும்பவில்லை. வி.பி.சிங்கிற்கு நெருக்கமாக இருந்த சந்தோஷ் பாரதியாவும், அப்போது நடந்த நிகழ்வு குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் ‘வி.பி.சிங், சந்திர சேகர், சோனியா காந்தி மற்றும் நான்’ என்ற குறிப்பிட்டுள்ளார். ‘தி பிஎம் இந்தியா நெவர் ஹேட்’ என்ற தலைப்பில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா எழுதிய புத்தகத்தில், ‘சோனியா காந்தி பிரதமர் போட்டியில் இருந்து விலகியிருக்க முடிவு செய்த பிறகு, ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிர ஊகங்கள் எழுந்தன. மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக விவாதிக்கப்பட்டன. எனது தந்தை மிகவும் பிஸியாக இருந்ததால், அப்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

நீங்கள் பிரதமராகப் போகிறாரா? என்று அவரிடம் கேட்டேன். ‘இல்லை, அவர் (சோனியா) என்னை பிரதமராக்க மாட்டார்’ என்று அவர் சுருக்கமாக பதிலளித்தார். இருப்பினும், பிரணாப் முகர்ஜி மன்மோகன் சிங்கை விட மூத்தவராக இருந்தார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ‘வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’ என்ற புத்தகத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ‘மன்மோகன் சிங் பிரதமர் பதவியை அளித்தது இனப் பிரிவினைக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது, ஆனால் அது உண்மையல்ல. மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றதன் பின்னணியில் உள்ள உண்மையான கதை அனைவருக்கும் தெரியும். அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கவில்லை. அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது’ என்று ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் அவர் எழுதிய புத்தக்கத்தில், ‘சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். சோனியா காந்தி மன்மோகன் சிங்கை மிரட்டவும் இல்லை. கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவுக்கு சென்ற போது மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சோனியா காந்தி பேசுவதை விட கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும், அவரது உரையாடலில், அவர் தனது மகனிடம் விவாதத்தைத் திருப்புவார். மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான சிற்பி. அவர் இந்திய பொருளாதார வளர்ச்சிக் கதையின் உண்மையான சின்னம்’ என்றும் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை பயணம்
1954 : பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்.
1957 : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் டிரிபோஸ் (மூன்று ஆண்டு பட்டம்)
1962 : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.பில்
1971 : வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகர்.
1972 : நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர்.
1980-82 : திட்டக்குழு உறுப்பினர்.
1982-85 : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
1985-87 : திட்டக்குழுவின் துணைத் தலைவர்
1987-90 : ஜெனீவாவில் தெற்கு ஆணையத்தின் பொதுச்செயலாளர்.
1990 : பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர்
1991 : பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்
1991 : அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1995, 2001, 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-96 : பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர்.
1998-04 : மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்
2004-14 : இந்தியப் பிரதமர்.

ஒரே போன் காலில் வாழ்க்கை மாறியது
ஒன்றிய அரசின் அரசுப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நன்மதிப்பை பெற்றவர். எனினும், அதிகாரி ரீதியிலான பதவிகளை வகித்து வந்த மன்மோகன் சிங்கை, அரசியல் பக்கம் அதுவும் அமைச்சராக மாறியது ஒரு தொலைபேசி அழைப்பு சம்பவத்துக்கு பிறகே நடந்தது. கடந்த 1991ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் டெல்லிக்குத் திரும்பியிருந்தார். அன்று இரவு, மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு போன் அழைப்பு வந்தது. அந்த போனை மன்மோகன் சிங்கின் மருமகன் விஜய் தங்கா எடுத்தார். எதிர்முனையில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய நபரான பி.சி.அலெக்சாண்டர் பேசினார். தனது மாமனார் தூங்கிக் கொண்டிருப்பதாக மருமகன் கூறினார். அவரை எழுப்பும்படி அலெக்சாண்டர் வற்புறுத்தினார்.

அடுத்த சில மணிநேரங்களுக்கு பிறகு மன்மோகன் சிங்கும் அலெக்சாண்டரும் சந்தித்தனர். சந்திப்பில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தனது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவியை மன்மோகன் சிங்கிற்கு அளிக்க இருந்த விருப்பத்தை அலெக்சாண்டர் தெரிவித்தார். ஆனால், அப்போது யுஜிசி தலைவராக இருந்த மன்மோகன் சிங், அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அலெக்சாண்டர் சொன்னதையும் மன்மோகன் சிங் நம்பவில்லை. மறுநாள், வழக்கம் போல யுஜிசி அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றார். இம்முறை நேரடியாக பிரதமர் பி.வி.நரசிம்ம ராவிடம் இருந்தே, மன்மோகன் சிங்கிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது போனில் பேசிய நரசிம்ம ராவ், ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.. அலெக்சாண்டர் எதுவும் கூறவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு, மன்மோகன் சிங், ‘அலெக்சாண்டர் பேசினார்.

ஆனால் நான் அவரை நம்பவில்லை’ என்று பதில் கொடுத்ததாக அவரது மகள் தமன் சிங் பின்னாளில் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன்பின் நடந்த பதவியேற்பு விழாவில், மற்ற அமைச்சர்களுடன் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க சில மணிநேரங்கள் மட்டுமே தனக்கு யோசிக்க நேரம் இருந்ததாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பொறுப்பை ஏற்க தனது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். பின்னாளில் பிரதமர் நரசிம்ம ராவுடன் சேர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கமாக மன்மோகன்சிங்
மாற்றினார்.

வைரலாகும் கடைசி பேட்டி
கடந்த 2004 – 2014ம் ஆண்டு வரை இரண்டு முறையாக முழுமையாக 10 ஆண்டுகளுக்கு மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமராக பதவி வகித்த பத்தாண்டு காலக்கட்டத்தில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அத்தனை விதமான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார். அப்படி 2014ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி நடந்த கடைசி பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை கருணையோடு நடத்தும்’ என்றார். முன்னதாக நிருபர் ஒருவர் அவரிடம், ‘உங்களின் அமைச்சரவையை திறம்பட வழிநடத்தத் தவறிவிட்டீர்களோ… அரசியல் ரீதியாக நீங்கள் தோல்வியுற்றீர்களா? ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள்? என்று கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர், ‘சமகால ஊடகங்களை விடவும் எதிர்க்கட்சிகளை விடவும், வரலாறு என்னிடம் கருணையோடு நடந்துகொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் பேசப்படும் அத்தனை விஷயங்களையும் என்னால் இங்கே வெளிப்படுத்த முடியாது. தற்போதைய சூழலையும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களையும் கருத்தில் கொள்கையில் என்னால் முடிந்ததை சிறப்பாக செய்திருக்கிறேன். நான் செய்தவை என்ன செய்யாதவை என்ன என்பதை வரலாறே தீர்மானித்துக் கொள்ளும். நான் பலவீனமான பிரதமர் என்பதை நான் நம்பவில்லை’ என அப்போது பேசியிருந்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மன்மோகன் சிங் பேசியவைதான் இப்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நண்பருக்கு பரிசு
கடந்த 1932 செப்டம்பர் 26ம் தேதி ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த மன்மோகன் சிங், 1947ம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. அப்போது மன்மோகன் சிங்கிற்கு 14 வயது. கடந்த 2008ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது, அவரது பால்ய நண்பரும் பாகிஸ்தானை சேர்ந்தவருமான ராஜா முகமது அலி, தனது மருமகனுடன் டெல்லி வந்தார். அவர் மன்மோகன் சிங் பிறந்த கிராமத்தின் புகைப்படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். பதிலுக்கு மன்மோகன் சிங், ஒரு தலைப்பாகை, ஒரு சால்வை மற்றும் டைட்டன் கடிகாரங்களை ராஜா முகமது அலிக்கு பரிசாக வழங்கினார். மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக பதவியேற்றபோது, இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் வாடும் இந்திய மக்களுக்கு, அமெரிக்காவின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க – இந்திய கூட்டாண்மையின் மிகப்பெரிய சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன் சிங் இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சாதனைகளுக்கு அடித்தளமாக மன்மோகன் சிங் காரணமாக இருந்தார்.

இவையெல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் சாத்தியமானது. அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதில் அவரது தலைமையிலான அரசு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சியைக்கு காரணமாக இருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அளப்பரியது. மன்மோகன் சிங்கின் மறைவுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை நெருக்கமாக வைத்திருக்க உதவிய அவரது அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் திடீரென பிரதமரான வரலாற்று பின்னணி: நட்வர்சிங் முதல் ஒபாமா வரை கூறிய தகவல்களின் தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,India ,Prime ,Natwar Singh ,Obama ,Delhi ,Congress ,Prime Minister… ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!