×

விபத்தில் மூளைச்சாவு அடைந்த டிரைவரின் உடல் உறுப்புகள் தானம்

மதுக்கரை : கிணத்துக்கடவு அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த டிரைவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள காரச்சேரியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் தங்கராஜ் (38). டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த 22ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையத்திலிருந்து காரச்சேரி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில் தங்கராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இது குறித்த விவரத்தை மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதன்பேரில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் தங்கராஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தலைமையில் டாக்டர் குழுவினர், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து கோவையில் 2 தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்த அனுப்பி வைத்தனர்.

உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வசதியாக கோவை மாநகர காவல் துறை உதவி கமிஷனர் தென்னரசு தலைமையில், சுந்தராபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொடுத்தனர். தங்கராஜ் உடல் சொந்த ஊரான காரச்சேரி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் தங்கராஜின் உடல், காரச்சேரியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த டிரைவரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Madukkarai ,Kinathukadavu ,Rangasamy ,Karacherry ,Coimbatore district ,Thangaraj ,
× RELATED கோவையில் தண்டவாளத்திற்கு யானைகள்...