×

?மார்கழி மாதத்தில் நிச்சயதார்த்தம் போன்றசுபநிகழ்வை நடத்தலாமா?

– எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை. அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்கள். மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு இராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு இராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரஹங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். நமது சொந்த காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி நாள் அன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் என்பது திறக்கப்படுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமைமிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பெருமை மிகுந்த மாதம் என்ற பொருளில் சொல்லப்பட்ட பீடு உடைய மாதம் என்ற வார்த்தை மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் நாமும் இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம். வாழ்வினில் வளம் பெறுவோம்..!

?முகத்தைப் பார்த்து ஜோதிடம் கூறுகிறார்களே, இது சாத்தியமா?

– வண்ணை கணேசன், சென்னை.
முகத்தைப் பார்த்துச் சொல்வதை அருள்வாக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். ஜோதிடம் என்ற வார்த்தையை அங்கே பயன்படுத்த இயலாது. ஜ்யோதிஷம் என்ற வடமொழி வார்த்தையைத்தான் நாம் ஜோதிடம் என்று அழைக்கிறோம். ஜ்யோதி என்றால் ஒளி என்று பொருள். ஜ்யோதிஷம் என்றால் அந்த ஒளி அறிவியல் என்று பொருள் காண வேண்டும். இயற்கையில் ஒளி தரக்கூடிய சூரியனையும் அதன் ஒளியையும் சூரியனிடமிருந்து ஒளியை உள்வாங்கி தங்களது குணத்தையும் சேர்த்து இந்த பூமியின் மீதும் அதில் வாழுகின்ற மனிதர்கள் மீதும் ஒளியைப் பிரதிபலிக்கும் மற்ற எட்டு கிரஹங்களைக் கொண்டும் பலன் அறியும் அறிவியல் கலையே ஜோதிடம் என்பது. நவகிரஹங்களின் அமைப்பைக் கொண்டு பலன் சொல்லப்படுவதே ஜோதிடம். மற்றவைகளை ஜோதிடம் என்ற பெயரில் அழைக்க இயலாது.

?பூனை அபசகுனமான பிராணியா?

– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இல்லை. உலகில் வாழும் எந்த பிராணியும் அபசகுனமான பிராணி அல்ல. ஆனால் மிருகங்களின் செயல்கள், பறவைகளின் ஒலிகள் ஆகியவை மனிதர்களுக்கு ஒரு சில தகவல்களைத் தருகின்றன. அந்த தகவல்கள் சுபநிகழ்வு குறித்தும் இருக்கலாம். அல்லது வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே தெரிவிப்பதாகவும் இருக்கலாம். வால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில் இந்த மிருகங்கள் மற்றும் பறவைகளின் செயல்பாட்டினை விவரித்திருப்பார்கள். மிருகங்கள் நமக்குத் தெரிவிக்கும்சுபசகுனங்களை மறந்துவிட்டு அசுப சகுனத்தை மட்டும் மனிதர்கள் ஆகிய நாம்தான் நினைவில் கொள்கிறோம். இறைவனால் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினத்தையும் அசுப சகுனமாகக்
கருதக் கூடாது.

?குடுகுடுப்பைக்காரர்கள் வீட்டு வாசலில் வந்து சொல்லும் தகவல்களைநம்பலாமா?

– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
குடுகுடுப்பைக்காரர்கள் வீட்டுவாயிலுக்கு வரும்போதே நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது என்று சத்தமாக சொல்லிக் கொண்டே வருவார்கள். இவர்களுடைய கையில் சிவபெருமானுக்குரிய உடுக்கையை வைத்துக்கொண்டு அதன் ஓசையை எழுப்பி அதனைத் தொடர்ந்து ஒரு சில வாக்குகளைச் சொல்வார்கள். இவர்கள் சிவபெருமானை மனதில் தியானித்து அந்த நேரத்தில் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பலனாகச் சொல்கிறார்கள். அதேபோல கையில் கோல் வைத்துக்கொண்டு முருகப் பெருமானை மனதில் தியானித்து குறி சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதற்குரிய விரதமுறைகளை சரியாகக் கடைபிடித்து வருபவர்கள் சொல்லும் தகவல்களை நம்பலாம். வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காகச் சொல்பவர்கள் சொல்லும் தகவல்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியமில்லை.

?கடந்த காலத்தில் ஜோதிடர்கள் திருமணத்திற்கு தேய்பிறை நாட்களை குறித்தது இல்லை, இன்று பல திருமணங்கள் தேய்பிறையில் நடப்பது ஏன்?

– சு.ஆறுமுகம், கழுகுமலை.
நீங்கள் சொல்லும் கருத்தினை மறுப்பதற்கில்லை. திருமண மண்டபம் கிடைத்தால் போதும், விடுமுறை நாளாக இருந்தால் போதும், அந்நிய தேசத்தில் வசிப்பவர்கள் திருமணத்திற்கு வருவதற்கு ஏதுவாக இருந்தால் போதும் என்று அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றவாறு முகூர்த்தம் குறிப்பது என்பது தற்போது அதிகமாகிவிட்டது. திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது வளர்பிறை, தேய்பிறை என்று சொல்வதை விட நேத்ரம் மற்றும் ஜீவன் உள்ள நாட்களாகப் பார்த்து குறிக்க வேண்டும். வளர்பிறையாக இருந்தால் கூட அந்த பட்சத்தின் துவக்கத்தில் வரும் நாட்களில் நேத்ரம் ஜீவன் இருப்பதில்லை. அந்த நாட்கள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கு உகந்தது அல்ல. அதே போல தேய்பிறை நாட்களில் பெரும்பாலும் ஸப்தமி திதி வரை நேத்ரம், ஜீவன் என்பது இருக்கும். இந்த நாட்களில் முகூர்த்தங்களை வைக்கலாம். இதுபோன்ற பல விதிமுறைகள் உண்டு. அவற்றை மனதில் கொண்டு நாள் வைக்கும்போது மணமக்களின் வாழ்வு சிறப்பாக அமையும்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

 

The post ?மார்கழி மாதத்தில் நிச்சயதார்த்தம் போன்றசுபநிகழ்வை நடத்தலாமா? appeared first on Dinakaran.

Tags : Marghazi ,S. ILANGOWAN ,MAYILADUDHARA ,Tamil Nadu ,
× RELATED உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள்