சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் சரஸ் மேளா, மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சி நாளை முதல் ஜனவரி 9ம் தேதி வரை நடக்கிறது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ எனப்படும் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 27ம் தேதி (நாளை) மாலை 4 மணியளவில் சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியினை துவக்கி வைக்க உள்ளார். இந்தக் கண்காட்சியில், ஆந்திரா மாநிலத்தின் அழகிய மரச் சிற்பங்கள், கொண்டப்பள்ளி பொம்மைகள், குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், பீகார் மாநிலத்தின் மதுபாணி ஓவியங்கள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள், மகாராஷ்டிர மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள் உள்ளிட்ட கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள், திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி), விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், கோரைப் பொருட்கள், அலங்கார விளக்கு திரைகள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், தேனி சானிடரி நாப்கின் மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. 27ம் தேதி முதல் 2025 ஜனவரி 9ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் சரஸ் மேளாவில் உணவு அரங்குகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பல மாநில மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் சரஸ் மேளா, மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; நாளை முதல் ஜனவரி 9ம் தேதி வரை நடைபெற உள்ளது appeared first on Dinakaran.