×

உலக அதிசயத்தில் ஒன்றாகப்போகும் ஜம்மு-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் திட்டம்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரயில் பயணம்; காஷ்மீர் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் செனாப் ரயில் பாலம்

உலகில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது தற்போது பலருக்கும் கனவாக உள்ளது. பலரும் வெளிநாடுகளுக்கு சென்று உலக சுற்றுலா கனவை நினைவாக்கி வருகிறார்கள். அதுபோலதான் இந்தியாவிற்கும் பல வெளிநாட்டவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்தும் பல வெளிநாட்டவரை வியக்க வைக்கிறது. இந்தியாவை பொருத்தவரை ரயில், விமானம் என அதிவேகமான போக்குவரத்துகளை பயன்படுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் எளிதாகவே சென்றுவிடலாம்.

ஆனால் ஜம்மு காஷ்மீர் பொருத்தவரை அந்த பயணம் அவ்வளவு எளிதல்ல. காரணம் அந்த மலைப்பகுதி, பள்ளத்தாக்கு என இயற்கையின் படைப்புகள் பயணத்திற்கு சற்று சவாலாக இருக்கும். ஆனாலும் காஷ்மீர் மீதான தீராத காதல் இன்றும் அனைவருக்கும் தொடர்கிறது. அந்த இயற்கையான பனிப்பொழிவை ரசிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவர். அப்படி அங்கு செல்ல வேண்டும் சென்றால் ஸ்ரீநகர் வரை விமானம் மூலமாக சென்று அங்கிருந்து வாகனங்களை பயன்படுத்தி மட்டுமே ஜம்மு வரை பயணம் செய்ய முடியும். உயரமான மலைப்பகுதிகள் என்பதால் அந்த பயணம் பலருக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, உள்ளூர்வாசிகளுக்கு கூட அவசர தேவை என்றால் நினைத்த நேரத்தில் மலைகளில் இருந்து கீழே இறங்க முடியாது.

அங்கு போக்குவரத்து வசதி என்பது 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே. எனவே அந்த மாநில மக்களுக்கும், சுற்றுலா பயணிகளின் நன்மைக்காகவும் உத்தம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா வரை ரயில் போக்குவரத்து திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்தது. கடந்த 1999ம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த திட்டம் 2002ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.37.012 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் தாமதமான இந்த திட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. ஜம்மு – உத்தம்பூர் – கட்ரா – ஸ்ரீநகர் – காசிகுண்டு – பாராமுல்லா இடையே மொத்தம் உள்ள 345 கி.மீ. தொலைவில் 327 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

ரியாசி – கட்ரா இடையே மட்டும் 17 கி.மீ. தூரத்துக்கு இமயமலையை உடைத்து ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் மட்டும் பணிகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளன. அந்தப் பணிகளும் ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட இருக்கின்றன. இந்த பாலம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு காஷ்மீர் மக்களுக்கு தங்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ள செனாப் பாலம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக அஞ்சி பாலம், காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இது கேபிள்களால் அமைக்கப்பட்ட இந்திய ரயில்வேயின் முதல் பிரம்மாண்டமான பாலமாகும். 20 ஆண்டு கால திட்டமான ஜம்மு – உத்தம்பூர் – கட்ரா – ஸ்ரீநகர் – காசிகுண்டு – பாராமுல்லா இடையேயான புதிய ரயில் திட்டம் விரைவில் நனவாக இருக்கிறது. அடுத்த மாதம், செனாப் மேம்பாலத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் உத்தம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா வரை 345 கி.மீ. தூரத்துக்கு தங்கு தடையின்றி ரயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் இனி கன்னியாகுமரி முதல் ஜம்மு, ஸ்ரீநகர் வழியாக பாராமுல்லா வரை ரயில்களை இயக்க முடியும். இதனால் ஜம்மு காஷ்மீரும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்.

அதிக கேபிள்களாலான அஞ்சி பாலம்
* உலகிலேயே அதிக கேபிள்களால் அமைக்கப்பட்ட பாலம். மொத்தம் 96 ராட்சத கேபிள்களால் அமைக்கப்பட்டுள்ளது.
* கேபிள்களை தாங்கக்கூடிய இரும்பு கோபுரங்களின் உயரம் 193 மீட்டர்.
* ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 331 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கம் முதல் இறுதி வரை…
* 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸை சேர்ந்த நரசிம்மராவ் காலத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
* 1999ம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2005ல் பணிகள் துவங்கப்பட்டது.
* 2008ல் சில பாதுகாப்பு நலன் கருதி பணிகள் நிறுத்தப்பட்டது.
* 2022ம் ஆண்டு செனாப் பாலம் பணிகள் முடிவடைந்தது.
* இத்திட்டத்தின் மூலம் 73 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவர்.
* இந்த கட்டுமானப் பணியில் பணியாற்றியவர்களில் 65 சதவீதம் பேர் உள்ளூர் வாசிகள். அவர்களில் 799 நபர்களுக்கு ரயில்வேயில் தகுதி அடிப்படையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
* மொத்தம் 38 சுரங்கள் அமைத்து, உலகிலேயே மிக உயரமான ரயில் பாலமாக செனாப் பாலமும், அதிக ராட்சத கேபிள்கள் மூலம் அமைக்கப்பட்ட ஒன்றாக அஞ்சி பாலம் பெயர் பெற்றுள்ளது.
* வருகிற ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, பிரதமர் கைகளால் இந்த ரயில் பயணம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

உலகிலேயே உயரமான பாலம்
* கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்திலும், செனாப் நதியில் இருந்து 359 மீ. உயரத்திலும் உள்ளது. உலகத்திலேயே மிகவும் உயரமான ரயில்வே மேம்பாலம் இதுதான்.
* ‘டெக்லா’ என்ற தொழில் நுட்பத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம்,1,315 மீட்டர்.
* 28,660 டன் எடையிலான இரும்பும், 46,000 கன மீட்டர் அளவிலான கான்கிரீட்டும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாலத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும்.
* மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும், 8 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கத்தையும் தாங்க கூடியது.
* இந்த பாலத்தின் ஆயுட்காலமும் 120 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post உலக அதிசயத்தில் ஒன்றாகப்போகும் ஜம்மு-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் திட்டம்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரயில் பயணம்; காஷ்மீர் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் செனாப் ரயில் பாலம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Kanyakumari ,Chenab Railway Bridge ,India ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...