×

வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்; ரூ.4.50 லட்சம் வரை கல்விக்கடன் பெற எந்தவித ஆவணமும் தேவையில்லை

கரூர்: வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம், ரூ.4.50 லட்சம் வரை கல்விக்கடன் பெற எந்தவித ஆவணமும் தேவையில்லை. மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கரூர் மனுநீதி நாள் முகாமில் டிஆர்ஓ கண்ணன் பேசினார். கரூர் மாவட்டம் முக்கணாங்குறிச்சி ஊராட்சி நத்தமேட்டில் மனுநீதி நாள் நிறைவு நாள் முகாமில் மாவ ட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையிலும், எம்எல்ஏ சிவகாமசுந்தரி முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதல்வரால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் தினமும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதல்வர், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மற்றும் தவப்புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டங்களை இந்த பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வி கற்றல் மூலம் சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் தனிமனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்து தங்களது குழந்தைகளை குறைந்தபட்சம் உயர்கல்வி வரை முழுமையாக படிக்க வைப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கல்விக்கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் தங்கள் அருகில் உள்ள வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். குறிப்பாக, ரூ.4.50 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு எந்தவித ஆவணமும் இன்றி பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் பெற்றால் அந்த குழந்தையின் வாழ்க்கை சுழற்சியே மாறிபோய் விடும். எனவே, இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் அரசுக்கு தகவல் தெரிவிக்க முன் வர வேண்டும். குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வில் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.

நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், வருவாய்த்துறை சார்பாக ரூ. 34.50 லட்சம் மதிப்பில் 69 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், ரூ. 58 லட்சம் மதிபபில் 116 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்களையும், 9 பயனாளிகளுககு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூ. 1767 மதிப்பில் எண்ணெய் வித்துக்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 16,440 மதிப்பில் தென்னங்கன்று மற்றும் பப்பாளி நாற்றுகளையும், கூட்டுறவுத்துறை சார்பாக 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 23 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், தொழிலாளர்மற் றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக 1 பயனாளி க்கு இயற்கை மரண உதவி த்தொகை ரூ. 35 ஆயிரம்என மொத்தம் 237 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 16 லட் சத்து 70,957 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் பிரகாசம், கோட்டாட்சியர் முகமது பைசல், இணை இயக்குநர் (வேளாண்மை) சிவானந்தன், தாட்கோ மேலாளர் முருகவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், தாசில்தார் குமரேசன், ஒன்றிய குழு தலைவர் சிவகாமி, முக்காணங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்; ரூ.4.50 லட்சம் வரை கல்விக்கடன் பெற எந்தவித ஆவணமும் தேவையில்லை appeared first on Dinakaran.

Tags : Karur ,DRO Kannan ,Karur Justice Day ,KARUR DISTRICT ,MUKKANANGURICHI ORADCHI ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...