×

மஞ்சள்இலைநோயால் கரும்பு மகசூல் பாதிப்பு; காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தரவேண்டும் கொமதேக கோரிக்கை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

கரூர், டிச. 24: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம இருந்து மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த முகாமில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கரூர் மாவட்ட நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் 90 சதவீத கரும்பு விவசாயிகள் புகளூர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்டு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் இலை நோயால் கரும்பு விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 டன் வரை அறுவடை செய்யப்படும் கரும்பு இந்த நோயால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கூட அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

கரும்பு விவசாயிகள் அனைவரும் ஆலையில் பதிவு செய்யும் போதே காப்பீடும் செய்யப்படுகிறது. இதுநாள் வரை நிர்வாகம் விவசாயிகளுக்கு காப்பீடுதொகை வழங்கவில்லை. உடனடியாக ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும், காப்பீடு செய்யாதவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டஈடு தொகையும் வழங்க வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையி ட்டு கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டஈடு தொகை பெற்றுத்தர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மணல் குவாரியை திறக்க வேண்டும்: கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ளுர் பயன்பாட்டிற்காக மணல் விநியோக பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவிரி படுகையில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர்களுக்கு வருமானம் இன்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாடுகளை பராமரிக்கவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தற்போதைய நிலை குறித்து கேட்ட போது, நீர்வளத்துறையிடம் இது தொடர்பாக உயர் அலுவலகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மணல் குவாரியை விரைந்து துவக்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என தேர்வு பெற்ற ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறோம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை (பிடிஇ டிஆர்டிஇ) நிரப்புவதற்கான அறிவிப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு இந்தாண்டு பிப்ரவரி 4ம்தேதி நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 60 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.அதற்கு கடந்த ஆறு மாதங்களாக காலியிடங்களை நிரப்புவதற்காக கலந்தாய்வும், பணி நியமன ஆணையும் வழங்கப்படாமல் உள்ளது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் நிலை அறிந்து கலந்தாய்வை உடனே நடத்தி, பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post மஞ்சள்இலைநோயால் கரும்பு மகசூல் பாதிப்பு; காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தரவேண்டும் கொமதேக கோரிக்கை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal ,Karur ,People's Grievance Redressal Day ,Karur District Collector's Office ,District Revenue Officer ,Kannan ,People's Grievance Redressal Meeting ,Dinakaran ,
× RELATED அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்