வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியின்போது தொடை சவ்வு காயத்தால் களத்தில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடுத்த 3 மாதத்துக்கு கிரிக்கெட் ஆட முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இரு அணிகள் இடையிலான 3வது டெஸ்டின் 3ம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சின் தொடை சவ்வில் காயம் ஏற்பட்டதால் பாதியில் அவர் வெளியேற நேரிட்டது. அதன் பின் மருத்துவ சிகிச்சை பெற்றும் பூரண குணம் ஏற்படவில்லை. இதையடுத்து, வரும் 2025 பிப்ரவரியில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக்கப்பட்டுள்ளார். மேலும், தென் ஆப்ரிக்காவில் வரும் ஜனவரியில் துவங்கவுள்ள எஸ்ஏ20 டி20 போட்டிகளிலும் அவர் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
பென் ஸ்டோக்சின் காயம் குணமாக 3 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறி உள்ளதால், வரும் 2025 மே மாதம் ஜிம்பாப்வே செல்லும் அணியில் இங்கிலாந்து அணிக்காக அவர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டில் மான்செஸ்டர் ஒலிஜினல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக பேட்டிங் செய்தபோதும், இதேபோன்று தொடை பகுதியில் உள்ள சவ்வில் காயம் ஏற்பட்டு பென் ஸ்டோக்ஸ் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post பென் ஸ்டோக்ஸ் 3 மாதம் ஆட முடியாது: தொடை சவ்வு காயத்தால் அவதி appeared first on Dinakaran.