- Bumrah
- மெல்போர்ன்
- ஆஸ்திரேலிய வீரர்களான
- ஆஸ்திரேலியா
- இந்தியா
- ஸ்காட் போலாந்து
- ஹேசல்வுட்
- சாம்…
- தின மலர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் நேற்று மெல்போர்னில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஹசல்வுட்டுக்கு பதிலாக மற்றொரு வேகம் ஸ்காட் பொலண்ட் களமிறங்ககினார், தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனிக்கு பதிலாக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு பதில் சுழல் வாஷிங்டன் சுந்தர் ஆடும் அணியில் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஆஸி அதிரடியாகவும், அதே நேரத்தில் பொறுப்புடனும் விளையாடியது. அறிமுக வீரர் சாம் தனது முதல் ஆட்டத்திலேயே அரைசதம் விளாசி 60ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கவாஜா 57, லபுஷேன் 72 ரன் என அடுத்தடுத்த அரைசதம் வெளுத்த வேகத்தில் வெளியேறினர். தொடர்ந்து 4வது வீரராக ஸ்டீவன் ஸ்மித்தும் அரை சதத்தை தாண்டினார். ஆனால் அதிகம் எதிர்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கினார் பும்ரா. தொடர்ந்து மார்ஷையும் 4ரன்னில் வெளியேற்றினார்.
அரை சதத்தை நெருங்கிய அலெக்ஸ் கேரியும் 31ரன்னில் நடையை கட்டினார். தொடக்கத்தில் பெரிய எண்ணிக்கையை குவிக்கும் வாய்ப்பில் இருந்த ஆஸி இடையில் பும்ராவின் புயல் வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. கேப்டன் பேட்கம்மின்ஸ் வந்ததும் ஆஸியின் ஸ்கோர் 300யை கடந்தது. மேலும் இந்திய வேகத்தை பார்க்கும் போது முதல்நாளே ஆஸியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் எ ன்று எதிர்பார்ப்பு இருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் தான் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி 86ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்சில் 311ரன் குவித்துள்ளது. இந்திய வீரர்களில் பும்ரா 3, ஆகாஷ், ஜடேஜா, வாஷிங்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இன்னும் 4விக்கெட் கைவசம் இருக்க ஆஸி வீரர்கள் ஸ்மித் 68, கம்மின்ஸ் 8ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.
கோஹ்லிக்கு அபராதம்
ஆஸி அணியில் அறிமுகமான இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் மீது இந்தியாவின் அனுபவ வீரர் விராத் கோஹ்லி தோளில் இடித்த சம்பவம் களத்திலும், வெளியிலும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுபோல் இளம் வீரர்களிடம் மோதுவதை, பகடி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் அணி ஆஸி. அதில் முதல் இடத்தில் இருந்தவர் ரிக்கி பாண்டிங், ஜெஸ்டின் லாங்கர் என பலர், ‘விராத் கோஹ்லிக்கு ஒரு ஆட்டத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளனர். கோஹ்லி ஆதரவாளர் ரவி சாஸ்திரியும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் விதி எண் 2.12ன் படி கோஹ்லியின் செயலுக்காக அவரது ஆட்ட ஊதியத்தில் 20சதவீதம் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
டாட்ஜ்பால் போட்டி
சென்னை அருகே மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான 9வது சப் ஜூனியர் டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் 2நாட்கள் போட்டி நேற்று தொடங்கியது. நாட்டில் உள்ள 25 மாநிலங்களில் இருந்து 22 சிறுவர், 12சிறுமியர் அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடந்த லீக் சுற்று ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி. படம்: சு.பாலாஜி
இளமை அறிமுகம்
இந்த டெஸ்ட்டில் அறிமுகமாகி உள்ள சாம் கான்ஸ்டாஸ்(19ஆண்டுகள், 85நாட்கள்) இப்போது ஆஸிக்காக களம் கண்ட 4வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் 3 இடங்கள் இயன் கிரெய்க்(17ஆண்டுகள் 239நாட்கள்), பேட் கம்மின்ஸ்(18ஆண்டுகள் 193நாட்கள்), டாம் கெரெட்(18ஆண்டுகள் 232நாட்கள்) ஆகியோர் உள்ளனர். கூடவே டெஸ்ட்டில் இளம் வயதில் அரைச்சதம் விளாசிய ஆஸி வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை சாம் பிடித்துள்ளார்.
முல்லாக் பதக்கம்
பாக்சிங் டே டெஸ்ட்டில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு ‘முல்லாக் பதக்கம்’ வழங்கப்படும். இது ஆஸி கிரிக்கெட் வீரர் ஜானி முல்லாக்(1841-1891) பெயரில் வழங்கப்படுகிறது. இந்த பதக்கத்தை இந்திய வீரர்களில் சச்சின் டென்டுல்கர்(1999), ஜஸ்பிரித் பும்ரா(2018), அஜிங்கிய ரகானே(2020) ஆகியோர் மட்டும் பெற்றுள்ளனர்.
சுழல் மர்மம்….
அஷ்வின் ஓய்வு பெறும் வரை, ‘ஆஸி ஆடும் களம் சுழலுக்கு சாதகமாக இல்லை’ என்று இந்திய அணி நிர்வாகம் சொல்லி வந்தது. அதனால் ஒரே ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் முதல் 3 டெஸ்ட்களிலும் வாஷிங்டன், அஷ்வின், ஜடேஜா என மாறி மாறி வாய்ப்பு பெற்றனர். இப்போது 4வது டெஸ்ட்டில் ஜடேஜா, வாஷிங்டன் என 2 சுழல் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆஸியில் நாதன் லயன் என ஒரே ஒரு சுழல் வீச்சாளர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதனால் அஷ்வின் இருக்கும் வரை ‘உள்ளே வெளியே’ பாலிடிக்ஸ் செய்ததோ நிர்வாகம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post மெல்போர்னில் வீசும் பும்ரா புயல்; முதல் நாளில் ஆஸி 311/6: அரைசதம் விளாசிய 4 வீரர்கள் appeared first on Dinakaran.