×

பனப்பாக்கம் கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை: பொதுமக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை: பனப்பாக்கம் கிராமத்தில் புதர்மண்டிக் காணப்படும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பனப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவள்ளூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை – திருப்பதி சாலையில் உள்ள பனப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று அங்கிருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.
அவ்வாறு அவர்கள் செல்வதற்கு நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, கடந்த 2005-06ம் ஆண்டு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். அதன் பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பஸ் நிறுத்தம் முன்பு புதர்கள் மண்டிக்கிடக்கிறது. பஸ் ஏற வரும் பயணிகள் புதர்களில் இருந்து வந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்ற அச்சப்படுகின்றனர். எனவே பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பனப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் பஸ் நிறுத்தம் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் நாங்கள் பஸ் ஏற வரும் போது விஷ ஜந்துக்கள் தீண்டிவிடுமோ என அச்சத்தில் உள்ளோம். மேலும் பஸ் ஏறுவதற்கு பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றுதான் பஸ் ஏறி செல்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் நிறுத்தத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்’’ என்றனர்.

The post பனப்பாக்கம் கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Panappakkam village ,Uthukottai ,Yellapuram ,Periypalayam ,Panappakkam ,
× RELATED ஒதப்பை கிராமத்தில் ஆக்கிரமிப்பை...