தஞ்சாவூர்: ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். ஒடிசாவில் நாளை மறுநாள் அகில இந்திய அளவிலான தடகள போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் தகுதி பெற்று கடந்த 3 ஆண்டுகளாக அதற்கென தனி பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் ஒழுங்கீன செயலுக்காக 15 மாணவர்களும் ஒடிசா செல்ல கூடாது என பல்கலை கழக நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் 15 பேரும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க உடனே மாணவர்கள் ஒடிசா செல்ல அனுமதி அளிக்குமாறு பல்கலை கழக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இதை அடுத்து கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்தவுடன் மாணவர்கள் 15 பேரும் உற்சாகத்துடன் ஒடிசா புறப்பட்டு சென்றனர். நண்பகல் 1.30 மணி அளவில் திருச்சியில் இருந்து ஹௌரா ரயிலில் செல்ல மாணவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்ததால் இன்று இரவு சென்னையிலிருந்து ஒடிசா செல்ல உள்ளனர். பல தடைகளை தாண்டி தடகள போட்டியில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.