×

10 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது; பள்ளிபாளையம் இரட்டை கொலையில் இன்ஜினியர் உள்பட 4 பேர் கைது

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே கரும்பு வெட்ட வந்த தொழிலாளர்கள் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 மாதத்துக்கு பிறகு துப்பு துலங்கியது. இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன்பேட்டை பிலிக்கல்மேட்டை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல். இவர் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி தனது தோட்டத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சீர்படுத்தினார். அப்போது, ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த ஒரு பள்ளத்தில் ஒரு மனித கை மட்டும் வெளியே தெரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் முன்னிலையில் குழியை தோண்டியபோது, அதில் ஒரு வாலிபரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலமாக கிடந்தவரின் உடலில் ஆஞ்சநேயர் படமும், கிரண் என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இறந்து போனவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என போலீசார் ஊகித்து விசாரணையை மேற்கொண்டனர். இதில் சடலமாக கிடந்தவர் மும்பையைச் சேர்ந்த கிரண் (30) என்றும், கரும்பு வெட்டுவதற்காக மும்பையை சேர்ந்த கொத்துக்காரர் மாருதி டாங்கே என்பவரால் வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்தது. கிரணுடன் வெட்டும் பணிக்காக ரஞ்சித் குமார் உள்ளிட்ட 10 பேரை மாருதி டாங்கே அழைத்து வந்துள்ளார். கிரண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த நாள், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டிருந்த ரஞ்சித் குமார் இறந்து போனார். போலீசார் விசாரணை மேற்கொண்டதால் கரும்பு வெட்ட வந்த மும்பை கும்பல் தலைமறைவாகியது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மும்பை உள்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மும்பை கொத்துக்காரர் மாருதி டாங்கே, பள்ளிபாளையம் சர்க்கரை ஆலைக்கு மும்பையை சேர்ந்த தொழிலாளர்களுடன் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன்பேட்டைக்கு கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் வந்த மாருதி டாங்கேவை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினர். இதில் 10 மாதம் முன்பு கரும்பு வெட்ட வந்த போது, கூலி பிரச்னையால் கிரண், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொத்துக்காரர் மாருதி டாங்கே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: பள்ளிபாளையம் சர்க்கரை ஆலையில் கரும்பு இன்ஸ்பெக்டராக இறைய மங்கலத்தை சேர்ந்த விஜய்(26) பணியாற்றி வந்தார்.

இவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். கரும்பு வெட்டும் பணிக்கு விஜய் மூலம் பள்ளிபாளையத்திற்கு 10 பேருடன் கடந்த மார்ச் மாதம் வந்தோம். இங்கு ஒரு டன் கரும்பு வெட்ட ₹1300 கூலி கொடுக்கப்படுகிறது. இதில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு டன்னுக்கு ₹300 மட்டும் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாயை நாங்கள் பிரித்துக்கொள்வோம். இதை தெரிந்துகொண்ட கிரணும், ரஞ்சித்குமாரும் தங்களுக்கு வழங்கும் கூலி போதாது என தகறாறு செய்தனர். சம்பவத்தன்று இரவு பிலிக்கல்மேட்டில் நவீன் என்பவரது தோட்டத்து கொட்டகையில் தங்கியிருந்த போது, எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நானும், மும்பையை சேர்ந்த உத்தவ்(28), இறையமங்கலத்தை சேர்ந்த கரும்பு இன்ஸ்பெக்டர் விஜய், அவரது நண்பரும் லாரி டிரைவருமான தனசேகர் (28) ஆகியோர் சேர்ந்து, கிரண், ரஞ்சித்குமாரை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினோம்.

இதில் படுகாயமடைந்த கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்குமார் உணர்வின்றி மயக்க நிலையில் இருந்தார். அருகில் உள்ள கதிர்வேல் தோட்டத்தில் கிரணை அவசர அவசரமாக புதைத்துவிட்டு, ரஞ்சித்குமாரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். ரஞ்சித்குமார் இறந்து போனதை தெரிந்துகொண்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டோம். இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மாருதி டாங்கே, உத்தவ், விஜய், தனசேகர் ஆகிய 4 பேரை கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post 10 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது; பள்ளிபாளையம் இரட்டை கொலையில் இன்ஜினியர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kokkarayanpet ,Namakkal ,Dinakaran ,
× RELATED சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜரிகை...