×

மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை ஒரு முக்கியமான சடங்கு. மண்டல பூஜை நாள், ஐயப்பனைப் பின்பற்றுபவர்கள் அல்லது பக்தர்களால் கடைப்பிடிக்கப்படும் மண்டல காலம் எனப்படும் 41 நாட்கள் நீண்ட துறவறத்தின் முடிவைக் குறிக்கிறது. 41 நாள் விரதம் மலையாள மாதமான விருச்சிகம் முதல் நாளில் தொடங்குகிறது.

இந்நிலையில் மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் 2வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பது வழக்கம். அதன்படி 2வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் தரிசனம் காலதாமதமாகி வருகிறது.

மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடந்த சில நாளாக சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி முதல் தினமும் 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 1.06 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை கடந்த 40 நாளில் 32 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நேற்று இரவு நிலக்கல்லில் சிறிது நேரம் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சன்னிதானத்தில் கூட்டம் குறைந்த பின்னரே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று மாலை 4 மணிக்கு வந்த பக்தர்களால் இரவு 10 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் நேற்று இரவு பக்தர்கள் வரிசை மரக்கூட்டத்தையும் தாண்டி சரங்குத்தி வரை காணப்பட்டது.

இன்று அதிகாலை நடை திறந்தபோதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெரிசலை குறைப்பதற்காக நாளை ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் பேருக்கும், நாளை மறுநாள் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜையை ஒட்டி பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் 2வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandala Puja ,Sabarimala Ayyappa ,Kerala ,Mandala Kalam ,Lord ,Ayyappa ,
× RELATED ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு...