டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் இணையத்தில் வெளியிடக்கூடிய காட்சிகள் (Webcasting footage) போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடுவதை தடுக்கும் வகையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
இந்த தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்ததன் மூலம், தேர்தல் ஆவணங்களின் ஒரு பகுதியை பொதுமக்கள் அணுகுவதை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது என்றும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில்; தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்பு. மிகவும் முக்கியமான திருத்தங்களை மக்களின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் திருத்த முடியாது. தேர்தல் குறித்த முக்கிய தகவலை மக்களுக்கு தருவதில்லை என்ற முக்கியமான முடிவை தன்னிச்சையாக எடுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு..!! appeared first on Dinakaran.