×

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

சென்னை: கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், கோவிட் காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு தரமறுக்கிறது.

இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் நாளிதழில் இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?

மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை.63 லட்சம் பேர் எந்த நாட்டை சார்ந்தவர்கள்?; சு. வெங்கடேசன் எம் பி

நான் நாடாளுமன்றத்தில் 2021 – 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என்ற கேள்வியை (231/13.12.2024) எழுப்பி இருந்தேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில் மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தரப்படவில்லை. மாறாக 2021 நிதியாண்டில் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த பயணிகள் 2230 கோடி முறை பயணித்துள்ளனர் என்று பதில் அளித்துள்ளார். 2022 – 23 ஆம் ஆண்டில் பயணிகளின் கட்டண சலுகையாக 57 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது சராசரியாக ரயில்வே கட்டணத்தில் 46 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வியின் நோக்கமே மூத்த குடிமக்கள் செய்கிற ரயில் பயணங்களின் விவரங்களை பெறுவதும், கோவிட் காரணத்தை பயன்படுத்தி திரும்ப பெறப்பட்ட மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகைகளின் காரணமாக எவ்வளவு தொகை அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என்பதை அறிவதற்குதான். ஆனால் அமைச்சரோ வேண்டுமென்றே அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொத்த பயணிகள் எவ்வளவு, மொத்த மானியம் எவ்வளவு என்று கணக்குத் தந்துள்ளார்.

எல்லோருக்குமான மானியத்தைக் கடந்துதான் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே அரசு இந்த கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச் சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முடியாது; மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.

அதே நேரம்,

இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் நாளிதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற இரயில்வே அமைச்சகம். பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது? அதுமட்டுமல்ல,
பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்.

The post கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : MP Su. Venkatesan ,Chennai ,MP Su. ,Venkatesan ,Covid ,Dinakaran ,
× RELATED மக்களவை செயலகத்தின் சிறப்பு...