×

வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட்டம் எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூர், டிச. 24: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை விவசாயிகளின் கடும் போராட்டத்திற்கு பின்னர் ஒன்றிய அரசு திரும்பபெற்ற நிலையில் அந்த மூன்று சட்டங்களையும் பின்புற வாசல் வழியாக கொண்டு வரும் முயற்சியாக வேளாண் சந்தைப்படுத்துதல் என்ற திட்டத்தினை தற்போது கொண்டு வருவதை கண்டித்தும், இந்த திட்டத்தை திரும்ப பெற கோரியும், பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேசிய தலைவர் ஜெஜித் சிங் உடல்நிலை கருதி உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்கள் கந்தசாமி, பிரகாஷ், சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் ஹனிபா ஏஐடியூசி சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட்டம் எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : United Farmers Front ,Thiruvarur ,Union Government ,Dinakaran ,
× RELATED ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்