×

ஏனாநல்லூர் நோய், பூச்சி தாக்கப்பட்ட நெல்வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

திருவிடைமருதூர், டிச.24: திருவிடைமருதூர் அடுத்த ஏனாநல்லூர் பகுதியில் நோய், பூச்சி தாக்கப்பட்ட நெல்வயல்களில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஏனாநல்லூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய நோய்யியல் துறை பேராசிரியர் ராஜப்பன் மற்றும் பூச்சியியல் துறை இணை பேராசிரியை ஆனந்தி, வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராஜதுரை ஆகியோர் நேரில் வயல்களில் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சம்பா நெல் பயிர்களில் குறிப்பாக டிபிஎஸ் 3, சொர்ணாசப் 1, ஆடுதுறை 51 மற்றும் ஆடுதுறை 54 ரகங்களில் இலை சுருட்டு புழு மற்றும் குறுத்து பூச்சி காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் சுருட்டப்பட்ட இலைக்குள் இருக்கும். இலைகள் நீளவாட்டில் மடித்து சுருட்டப்பட்டிருக்கும். தாக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறமாக காய்ந்து சருகு போல் இருக்கும். 10 சதவீதம் இலை சேதம் பயிர் வளர்ச்சி பருவம் 5 சதம் பூக்கும் பருவத்தில் பாதிப்பு ஏற்படும். இவற்றை கட்டுபடுத்த குளோரிபைரிபாஸ் 20 இசி 500 மில்லி அல்லது புரோபோனோபாஸ் 50இசி 400மில்லி அல்லது குளோரான்ட்டிலிப்ரோல் 18.5 இசி 60 மில்லி அல்லது இண்டாக்சாகார்ப் 14.5 இசி 80 மில்லி என இதில் ஏதாவது ஒரு மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். பூப்பூக்கும் தருணத்தில் தெளிக்க கூடாது. பூ பூக்கும் தருணத்தில் தெளித்தால் மகரந்தம் பாதிக்கப்படுகிறது. எனவே 3 மணிக்கு மேல் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

மேலும் குறுத்து பூச்சி புழுக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைகள் மேற்பகுதியில் முட்டை குவில்கள் இருக்கும். பெண் அந்து பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நடுக்குறுத்து காய்ந்து விடும் பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். கதிர் பருவத்தில் தாக்கப்பட்டால் கதிர்கள் வெண்கதிராக மாறிவிடும். 5 சதம் நடுக்குறுத்து கருகுதல், 2 சதவீதம் வெண்கதிர்கள் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 20 இசி 500 மில்லி அல்லது புளுபென்டியமைடு 18.5 டபுள்யு டிஜி 50 கிராம் அல்லது கார்டாப்ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி 400 கிராம் இதில் ஏதாவது ஒரு மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர்.

அப்போது துணை வேளாண்மை அலுவலர் சுந்தரேசன், அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் சக்கரவர்த்தி, வேளாண்மை உதவி அலுவலர் காயத்ரி மற்றும் ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

The post ஏனாநல்லூர் நோய், பூச்சி தாக்கப்பட்ட நெல்வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Enanallur ,Thiruvidaimarudur ,Aduthurai Rice Research Station ,Tamil Nadu Agricultural University ,
× RELATED ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை